மூன்று மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான உரிமம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், மத்திய, தெற்கு மற்றும் ஊவா ஆகிய மூன்று மாகாணங்களிலேயே இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்காக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையானது, இந்த மாதம் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேற்றிலிருந்து (14) அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசாங்கத் திணைக்களம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வாகன வருமான வரிபத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு, தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதால் மே மாதம் 17ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன வருமான வரிபத்திரத்தை மீண்டும் புதுப்பிக்கும் போது, அபராதத் தொகை அறவிடப்படாதென்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
