Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

இந்தியா கொடுக்கும் 500 மில்லியன் டொலரை எப்படி பயன்படுத்த வேண்டும்? − இந்தியா வெளியிட்ட அறிவிப்பு இதுதான்



கொவிட் தொற்று நோய் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது.


பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில், நிதி அளிப்பதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இலங்கையுடன் கடந்த பெப்ரவரி 2ம் திகதி இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) ஒப்பந்தம் செய்து கொண்டது.

எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், வேலைகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து விற்பனையாளரால் வழங்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மீதமுள்ள 25 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து விற்பனையாளரால் வாங்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 18ம் திகதி முதல் கடன் வரியின் கீழ் ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.

இலங்கை தற்போது கையிருப்பு வீழ்ச்சியுடன் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாததால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியாவில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் இரு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிந்துணர்வுக்கு ஏற்ப நடந்து வருகின்றன.

அந்நியச் செலாவணி நெருக்கடியால் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கான எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளது.

இலங்கையில் தற்போது நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

கூடுதலாக, நெருக்கடியை எதிர்கொள்ள உதவும் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான மற்றொரு கடன் வசதியை இந்தியாவுடன் இலங்கை இறுதி செய்ய உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »