Our Feeds


Monday, March 28, 2022

ShortTalk

PHOTOS: அனைத்து துறைகளிலும் பெண்களின் வகிபாகம் விரிவடைந்துள்ளது: உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்(ஏ.சி. றியாஸ், றியாத் ஏ.மஜீத்)


சமூக வளர்ச்சியின் நோக்கில் மகத்தான பங்களிப்பை செய்துள்ள புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்களால் வழிநடத்தப்படும் உலக மயமாக்கலுக்கு முன் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு விரிவடைந்து வருகிறது என தென்கிழக்குப்   பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்.கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு (28) கலை, கலாச்சார பீடத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.


பால்நிலை சமத்துவத்துக்கும், சமநிலைக்குமான நிலையத்தின்  பணிப்பாளர் கலாநிதி எம்.எம். மஸ்றுபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு  உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 


இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்


மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்களை பலப்படுத்துவதன் மூலம் பௌதிக மற்றும் மானிட அபிவிருத்தியின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.


எமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும் பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் பெண்களின் முழுமையான பங்கேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது, உண்மை, நீதி மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் பெண்களை மதிக்குமாறு  கேட்டுக்கொண்டார்.


பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு ஒற்றுமையாகச் செயற்படுவது முக்கியமாகும், அனைத்து துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருதிக் கொண்டு நமது நாட்டில் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் அதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


எங்களது பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் பெண்களாகவும் , 28 வீதத்திற்கு  மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் பெண் ஊழியராகவும்

கடைமையாற்றுகிறார்கள். பெண்களுடைய விஷயத்தை கவனத்தில் எடுத்து கரிசனை செலுத்த வேண்டுமென்றார்.


நமது சமுதாயத்தில் பெண்களை எடுத்துக்கொண்டால், முதலாவது பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி உருவாக்கிய பெருமை இலங்கை  நாட்டுப் பெண்களுக்கு உரித்தாகும். 


நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாக  உள்ளனர். நாட்டுடைய வருமானத்தை அதிகரித்துத் தருகின்ற 6 மில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய செலாவணியை பெண்கள் ஒரு வருடத்துக்கு உழைப்பவர்களாக இருக்கிறார்கள்.


இதுவரை 20 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தேயிலை, இறப்பர் தொழிற்சாலை களிலும் 25 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அந்நிய செலாவணியை ஈட்டுத்தருகிறார்கள்.மேலும் 44 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள்  ஆடைதொழிற்சாலையில் வருமானத்தை ஈட்டுபவர்களாக இருந்தார்கள், தற்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்து கொண்டிருக்கிறது. 


Local Government Participation women's Local Government Organizations. ( Eastern Province) எனும் தலைப்பில் நான்  அண்மையில் ஆராய்ச்சி செய்தேன். அரசியலையெடுத்துக் கொண்டால் 5% பெண்களுடைய பங்குபற்றுதல் இருக்கிறது. அந்த ஆய்வில் 10% பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.


446 உள்ளூராட்சி மன்றங்களில்  ஊழியர்கள், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக 15 பேர்தான் பெண்கள் இருக்கிறார்கள்,  இப்போது 25 வீதம் பெண்களுக்கு பங்கீடு பாராளுமன்றத்திலே கொடுக்கப்பட்டும்,  உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு எந்தவிதமான பதவிகளும் கொடுக்கப்படுவதில்லை அந்த அளவுக்கு பரிதாபமாக இருக்கிறது பெண்களுடைய நிலைமை என்றார்.


இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக கலாநிதி செல்வி திருச்சந்திரன் கலந்து கொண்டார்.


நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால்  தரநிர்ணயமையப் பணிப்பாளர் பேராசிரியை எம். ஐ. எம். சபீனா மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா, எம்.ஜி.ஹஷான் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள்,  விரிவுரையாளர்கள்,  பல்கலைக்கழக உயரதிகாரிகள்,  பிரதேச பெண் உத்தியோகத்தர்கள், மாணவிகள் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மகளிர் சங்கத்தின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.Subscribe to this Blog via Email :
Previous
Next Post »