Our Feeds


Monday, August 1, 2022

ShortTalk

சர்ச்சைக்குறிய சீன கப்பல் தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை - கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா



(எம்.மனோசித்ரா)


அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் , அது குறித்து தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது என்றும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா வீரகேசரிக்கு தெரிவித்தார்.


குறித்த சீன கப்பலின் வருகையானது தற்போது நாட்டில் புதிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. எதிர்வரும் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள குறித்த சீன கப்பல் , 17 ஆம் திகதி வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் தாம் முன்னரே அறிந்திருந்ததாக இந்தியா அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இந்தியா, குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பில் முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் இந்த கப்பலின் வருகை நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக  கொழும்பிற்கு டெல்லி உயர் மட்டம்  தகவல் அனுப்பியுள்ளது. 

சீன கப்பல் தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டதையடுத்து, 'தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என்று தாம் நம்புவதாக' சீனா தெரிவித்துள்ளது.

இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் குறித்து கடற்படைக்கு ஏதேனும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று வினவிய போதே, கடற்படை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 'இந்த கப்பலின் வருகைக்கான அனுமதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றிடம் பெற்றுக் கொள்ளப்படும் என்று நான் எண்ணுகின்றேன். 

எனினும் எனக்கு இதுகுறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரியாது. நாளை காலை (இன்று காலை) இந்த கப்பலின் வருகைக்கும் இலங்கை கடற்படைக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்த தகவல்களை சேகரித்து, அதனை வழங்க முடியும்.' என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா வீரகேசரிக்கு மேலும் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »