Our Feeds


Saturday, December 24, 2022

News Editor

பயங்கரவாத தடைச்சட்டம் ஜனவரி 31 க்கு முதல் முழுமையாக இரத்துச் செய்யப்படும்


 

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தென்கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (டிச. 23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்பதால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே,ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திர திஸ்ஸ ஆகியோரின் இணை தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமூல உருவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க  எதிர்பார்த்துள்ளேன்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர்,ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளார்கள்.ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு அமைய நாட்டில் நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் நாளாந்தம் வலுப்பெற்ற நிலையில் உள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »