Our Feeds


Friday, December 23, 2022

ShortTalk

5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை உறுதி - அமைச்சர் விஜயதாஸ



(இராஜதுரை ஹஷான்)


சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையுடன் தொடர்புடையவர்கள்.

5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் வியாபாராம் தீவிரமடைந்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனை செய்வது சிறந்த எடுத்துக்காட்டு அல்ல,இருப்பினும் மாணவர்களின் பாதுகாப்பையும்,எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனை செய்வதை விடுத்து நாட்டுக்குள் வரும் போதைப் பொருட்களை தடுப்பது பொருத்தமானதாக அமையும் என சமூகத்தில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறோம்.இலங்கை ஒரு தீவு நாடு கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப்பொருள் உள்வருகிறது.

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப்பொருள் உள்வருவதை தடுக்க கடற்படை மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐஸ் போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் கடந்த நவம்பர் மாதம் வரை நாட்டில் அமுலில் இருக்கவில்லை.ஐஸ் போதைப்பொருளை ஒரு தடவை பயன்படுத்தினால் அந்த பழக்கத்தில் இருந்து ஒருபோதும் விடுபட முடியாது,ஐஸ் ரக போதைப்பொருளுக்கு முழுமையான அடிமையானவர்கள் இரண்டு வருடம் தான் உயிருடன் இருப்பார்கள் என வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 74 சதவீதமானோர் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையுடன் தொடரபுடையவர்கள்.ஏனைய கைதிகள் போதைப்பொருளுக்காக கொலை,கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளுடன் ஏதாவதொரு வழிமுறையில் தொடர்புடையவர்கள்.

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு இளம் தலைமுறையினர் குறுகிய காலத்திற்குள் அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐஸ் போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இயற்றப்பட்டது.அதற்கமைய 5 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உறுதி என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »