Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் - SLPP யை முன்னிலைப்படுத்தியே அரசியல் கூட்டணி உருவாகும் - காரியவசம் நம்பிக்கை!



(இராஜதுரை ஹஷான்)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தியே பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து அமைக்கும் அரசியல் கூட்டணியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தலுக்கு அஞ்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் எமக்கு கிடையாது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் தேர்தலை நடத்துவது எந்தளவிற்கு சாத்தியமாக அமையும் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய நிதி செலவுகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும். அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவது கூட பெரும் போராட்டமாக உள்ள நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பிரதான 8 அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தியே புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுப்பாடுகள் உள்ளன.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்பதற்காக கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து அமைக்கும் அரசியல் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »