Our Feeds


Wednesday, January 4, 2023

ShortTalk

தேர்தலை நடத்தி நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல மக்கள் இடமளிக்கக் கூடாது - ஐக்கிய தேசிய கட்சி



(எம்.ஆர்.எம்.வசீம்)


நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் ரூபா செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அத்துடன் இந்த வருடத்தில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே ஜனாதிபதியின் இலக்கு. அதற்கு  அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (ஜன.03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த வருடம் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான கறுப்புக்கரை படிந்த வருடமாக வரலாற்றில் பதிந்துள்ளது. 2022இல் இளைரஞர்கள் பூரண சமூக மாற்றத்தையே கோரி வந்தனர்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு முகம்கொடுக்க அனைவரும் பின்வாங்கும்போது ரணில் விக்ரமசிங்க முன்வந்து இந்த சவாலை ஏற்றுக்கொண்டார். 

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் விடுத்திருந்த அழைப்பு தொடர்ந்தும் இருக்கின்றது. என்றாலும் எதிர்க்கட்சிகள் வழமைபோன்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதையே காண்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை மிகவும் துரதிஷ்டமான நிலைக்கே பயணிக்கும்.

அத்துடன், எதிர்க்கட்சிகள் பணம் அச்சிட்டாவது தேர்தலுக்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் அது நாட்டை அராஜகநிலைக்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும். அவ்வாறு இடம்பெற்றால் இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்.

3வருடங்கள் நாடுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரநிலையை அடைந்து வருகின்றது. இந்நிலையில் 20பில்லியன் செலவழித்து, 8ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கும் தேர்தலை நடத்தினால் மீண்டும் நாடு பழைய நிலைக்கே செல்லும். அதனால் மக்கள் இது தொடர்பாக சிந்தித்து செயற்படவேண்டும்.

ஏனெனில் கடந்த 3வருடங்களாக மக்கள் மிகவும் நெருக்கடியான வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். தற்போது அந்த நிலையில் இருந்து ஓரளவு விடுதலை கிடைத்திருக்கின்றது.

அதனால்தான் 31ஆம் திகதி இரவு இளைஞர்கள் காலிமுகத்திடல் உடபட பலவேறு நகரங்களில் ஒன்றுகூடி, பட்டாசு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுருந்தனர். இதனை எதிர்க்கட்சி உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் தேர்தல் நடத்தி, அதற்கு செலவழிக்கவே்ண்டி ஏற்பட்டால் நாடு பின்னடைவுக்கே மீண்டும் செல்லும்.

எனவே 2023இல் நாட்டின் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் வங்குரோத்து நிலையில் இருந்த மீட்ட நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லாமல் பாதுகாக்கவும் மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தவுமே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அதனால் தேர்தலை நடத்தக்கோரி அந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்கிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »