Our Feeds


Friday, January 6, 2023

SHAHNI RAMEES

#VIDEO: முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

 



புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில்

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.



பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து வர கல்வி அமைச்சு அனுமதி வழங்குமாறு மக்கள் கோரும் அவல நிலை தோற்றம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள்,  போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.


கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான் இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.


நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.


பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.


இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.


புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.


போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »