மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக 2024.08.09 முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) மற்றும் 64(5) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாந்து ஆகிய இருவரையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர்நீதிமன்றம் 2024.08.09 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருப்பதால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.