அரசாங்கத்திற்கான வரி நிலுவையைச் செலுத்த வேண்டியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை அறவிடுவதற்காக, உச்ச அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அத்திணைக்களம்,வரி செலுத்தத் தவறுபவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
நிலுவையாக உள்ள வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிலுவை வரியை செலுத்த வேண்டியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள், அதனை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை,வரியை வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ, பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களளை அறிவுறுத்தியுள்ளார்.