(இராஜதுரை ஹஷான்)
போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதை நோக்கதாக கொண்ட தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ' முழு நாடும் ஒன்றாக' தேசிய வழிநடத்தல் சபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முதன்முறையாக கூடியது.
போதைப்பொருள் பாவனையை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கும் பொருட்டு நாடும் ஒன்றாக என்ற தேசிய கண்காணிப்பு செயற்திட்டத்துக்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இந்த செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக தேசிய வழிநடத்தல் சபை ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய வழிநடத்தல் சபையானது போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழித்தல், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கல்இபொதுசன நிறுவனங்களை ஒன்றிணைந்து ஊடக கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.
