(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 22ஆம் திருத்தத்திற்கு அரச தரப்பைத் தவிர வேறு யாரும் ஆதரவளிப்பதில்லை. சர்வதேச அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறுகிய சிலரே இதனை எதிர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதன் மூலம் அவர் மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22ஆம் திருத்திற்கு குறுகிய சிலரே எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதனை ஒருபோதும் பின்வாகங்கப்போவதில்லை என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் அனைவருடன் கலந்துரையாடியே கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் அவ்வாறான எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அந்த கட்சியை சேர்ந்த லால் விஜேநாயக்க போன்றவர்களே பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள்.அரசாங்கம் 22ஆம் திருத்தத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்ட பின்னரே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி இருந்தது.அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடினார்கள்.
அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்திற்கு குறுகிய ஒருசிலரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதனால் இதனை மீள பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களை தவிர ஏனைய அனைத்து தரப்பினரும் எதிராகவே இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பிரசாரங்களில் ஈடுபட்டுவந்த பல துறைசார் நிபுணர்களும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு ஆதரவான பல சட்டத்தரணிகள் இதனை எதிர்கிறார்கள். அதேபோன்று சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகள் அரசாங்கத்தின் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளடன் இது நீதிமன்ற சுயாதீனத்துக்கு தலையீடு செய்யும் நடவடிக்கை என அவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது குறுகிய சிலரே இதனை எதிர்ப்பதாக ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்திருப்பதன் மூலம் அவர் மக்களை பிழையாக வழி நடத்தியுள்ளார்.Travel Guides & Travelogues
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தை கொண்டுவந்தபோது, அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்த அனைவரும், தற்போது கொண்டுவந்திருக்கும் 22ஆம் திருத்த்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியும் அன்று 18ஆம் திருத்தத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தது. இந்நிலையில் 22ஆம் திருத்தத்தை வேறு அரசாங்கம் ஒன்று கொண்டுவந்திருந்தால், அப்போது இதற்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று பாரிய போராட்டங்களை மேற்கொண்டுவந்திருப்பார்கள் என்றார்.
