Our Feeds


Thursday, August 27, 2026

Zameera

ஜனாதிபதியின் பொதுக்கூட்டங்களுக்கு காரணம் என்ன? முஜிபுர் ரஹ்மான்



(எம்.மனோசித்ரா)


அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் மக்கள் செல்வாக்கை மீட்டெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாடு தழுவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


26ஆம் திகதி புதன்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பாராளுமன்றத்தில் அமைச்சர்களும் உறுப்பினர்களும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, ஜனாதிபதி சபைக்கு வந்து உரையாற்றி நிலைமையைச் சமாளிப்பது வழமையான ஒன்றாகும். தற்போது அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு தவறுகளைச் செய்து வருவதை உணர்ந்தே ஜனாதிபதி தாமே நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்துள்ளார்.


மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் தொடர்ந்து தள்ளிப்போட்டு வருவதால் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் எழும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் மக்களின் நிலவரத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு முயற்சியாகவே ஜனாதிபதியின் இந்தச் சுற்றுப்பயணம் அமையும்.


அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொதுக்கூட்டங்களுக்கு மக்களைக் அழைத்து வருவது பெரிய விஷயமல்ல. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அதிகளவில் மக்களைக் கூட்டிக் காட்டிய போதிலும் தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்தன.


ஜனாதிபதி நாடு முழுவதும் சென்று பேசவுள்ள கருத்துக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரும் உரிய பதிலடி கொடுப்பார்கள. வரவிருக்கும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றது என்றார். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »