(எம்.மனோசித்ரா)
நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், 'சமூகப் பாதுகாப்புத் துறை தொடர்பான பத்து ஆண்டுக்கால தேசிய செயற்றிட்டத்தை' (2026-2035) நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தொழில் அமைச்சர், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர், மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆகியோரினால் கூட்டாகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே இவ்வாறாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கையின் தேசிய சமூகப் பாதுகாப்பு கொள்கை திட்டத்துக்கு கடந்த 2024 ஜூலை 22 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதனை நடைமுறைரீதியாகச் செயற்படுத்துவதற்காக 2025 செப்டம்பர் 15 அன்று தேசிய சமூகப் பாதுகாப்பு மூலோபாயம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கமைய அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் செயற்பட அறிவுறுத்தப்பட்டனர்
குறித்த தேசிய மூலோபாயமானது நான்கு பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அதற்கமைய சமூக மானியங்கள், சமூகப் பாதுகாப்பு, சமூகக் காப்பீடு மற்றும் உற்பத்தித் திறன்சார் சேர்க்கை இந்த நான்கு தூண்களையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மூலோபாயத்தை நடைமுறைரீதியாகச் செயற்படுத்துவதற்கான முக்கிய கருவியாகவே, இந்த 2026-2035 ஆம் ஆண்டுக்கான 10 ஆண்டுக்கால தேசிய செயற்றிட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.