Our Feeds


Wednesday, September 30, 2026

ShortNews

எதிர்கால பாராளுமன்றத்தால் 22ஆவது திருத்தத்தை இரத்து செய்ய முடியும் - ஜீ.எல்.பீரிஸ்!


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நாட்டின் ஜனநாயக கலாசாரத்திற்கும், மக்கள் உரிமைகளுக்கும் முரணானது. அதனால்  22ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கான பூரண அதிகாரம்  அடுத்துவரும் அரசாங்கத்துக்கு இருக்கிறது என பேராசிரியர் ஜீஎல். பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின்  22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது இலங்கைச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இதுவே முடிவு அல்ல. எனினும், எதிர்கால பாராளுமன்றமொன்று இது தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்கூட்டிய அதிகாரம் உள்ளது.

நமது அரசியலமைப்பின் கீழ் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. ஆனால், பாராளுமன்றம் அந்த நீதித்துறை அதிகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்துகிறது. இலங்கையின் அரசியலமைப்பில், இறைமை மக்களிடமே உள்ளது என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் ஒரு செயற்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக எமது நாட்டில் சட்டங்கள் பாராளுமன்றத்தினால் இயற்றப்படுகின்றன.

அவ்வாறாயினும், எந்தவொரு சட்டத்தினையும் விவாதித்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் சட்டமொன்றினை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு மக்களின் அனுமதி பெறுவது அவசியமாகும். நேரடியாக மக்களிடம் சென்று, இதற்கு விருப்பமா அல்லது இல்லையா என்ற கேள்வியைக் கேட்டு, மக்களின் ஒப்புதலுக்கு உட்பட்டே சில சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது.

மக்கள் இறைமையானது நடைமுறையில் சர்வஜன வாக்கெடுப்புகள் ஊடாகவே செயற்படுத்தப்படுகின்றன. மக்களின் விருப்பம் என்னவென்பதைக் கண்டறிவதற்கான நடைமுறை வழிமுறை என்னவென்றால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, இந்த திருத்தத்துக்கு விருப்பமா இல்லையா என்பதைக் மக்களிடம் கேட்பதாகும்.

சட்டங்களை இயற்றும் செயற்பாட்டில் இந்நாட்டு மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. பாராளுமன்றமானது ஐந்து ஆண்டுகள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே தெரிவு செய்யப்படுகிறது.

அந்த ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டதும் புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படுகிறது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்திற்கு, இதற்கு முன்னர் இருந்த பாராளுமன்றம் நியாயமற்ற விதத்தில் மக்களுக்கே உரிய இறைமையைப் பறித்துக்கொண்டது என்று உணர்ந்துகொள்ளும் பட்சத்தில், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இறைமையை மீண்டும் இலங்கை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான அதிகாரம் இருக்கிறது.

அதனால் இன்னும் மூன்று ஆண்டுகளில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்திற்கு 22ஆவது திருத்தத்தை  ரத்து செய்வதற்கான உரிமை மட்டுமல்ல, பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை நாங்கள் முழுமையாக, தெளிவாகக் கூறுகிறோம்.

ஏனெனில், சட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி, எந்தவொரு பாராளுமன்றத்தினாலும் எதிர்கால பாராளுமன்றங்களின் கைகளைக் கட்டிப்போட முடியாது. தற்போதைய பாராளுமன்றம் என்னதான் செய்தாலும், எது பொருத்தமானது என்று நம்பினாலும், அவை அனைத்தையும் நிராகரிப்பதற்கும், அதற்கு முற்றிலும் மாறுபட்ட செயற்பாட்டைப் பின்பற்றுவதற்கும் எந்தவொரு தடையுமின்றி அரசியலமைப்பின் கீழ் எதிர்கால பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

எமது நாட்டில் இதுவரை 22 தடவைகள் அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றின் ஆயுட்காலம் மிகவும் குறைவானது, மிகக் குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே அந்த அரசியலமைப்புத் திருத்தங்கள் நடைமுறையில் இருந்தன.

எனவே 22ஆவது திருத்தச் சட்டம் இந்நாட்டின் ஜனநாயக கலாசாரத்திற்கும், மக்கள் உரிமைகளுக்கும் முரணானது என்பதே எமது நிலைப்பாடு. அன்றும் நாங்கள் இந்த நிலைப்பாட்டில்தான் இருந்தோம், இன்றும் இருக்கிறோம். எனினும், இந்தப் பாராளுமன்றத்தில் இதற்கு எதிரான கருத்து வலுவாக இருந்தது. இது எந்த காலத்திற்கும் நிலைத்திருக்கும் கருத்தல்ல; அவை காலத்திற்கு காலம் மாறுகின்றன.

இதுபோன்ற விடயங்கள் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடம் இருக்கக் கூடாது என்பதே எமது கருத்து. அந்த அதிகாரத்தை ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும்; அதுவே அரசியலமைப்பு நீதிமன்றமாகும்.

அத்தகையதொரு அமைப்பு எமது நாட்டில் இருந்தது, 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ், அரசியலமைப்பினை வியாக்கியானம் செய்வது தொடர்பாக எழும் சிக்கல்கள் குறித்து பரிசீலித்து வழக்குத் தீர்ப்புகளை வழங்குவதற்கு தனித்துவமான சந்தர்ப்பமொன்று இருந்தது.

அந்த அதிகாரம் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அந்தத் துறையில் விசேட அனுபவமும் நிபுணத்துவமும் அறிவும் கொண்ட நீதிபதிகள் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

எனவே 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் இருந்ததைப் போன்றதொரு நீதிமன்றத்தை நிறுவுவது எமது நாட்டிற்கு பொருத்தமானது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் புதியதொரு முழுமையான அரசியலமைப்பை தயாரிக்கும்போது இத்தகையதொரு நீதிமன்றத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயத் தேவையாக நாம் காண்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »