(க.சிவலிங்கமூர்த்தி)
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அணிவிப்பதற்காக 500 உடல் கமராக்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் செயற்பாட்டில் பாரதூரமான முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நுகேகொடையில் அமைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ் இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொலிஸாருக்கு 500 உடல் கமராக்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பொலிஸ் நிலையங்களுக்கு வெளியே கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் கமராக்களை அணிவிப்பது போதுமானதல்ல. பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
பொலிஸ் நிலையங்களுக்குள் தனிநபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக பதிவாகின்றன. ஆனால், உடல் கமராக்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுத்திருந்தாலும், அந்த நல்ல பணியைக்கூட அரசாங்கம் தவறான முறையில் செய்கின்றது.
இந்த விலைமனு கோரல் ஆவணம் முறையாக தயாரிக்கப்படவில்லை. அதிலுள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆவணம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அதில் தோன்றும் கோடுகள்கூட அகற்றப்படவில்லை.
இந்த விலைமனு கோரலில் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் முறையற்றவை என்ற விமர்சனத்தை உறுதிப்படுத்தும் வகையில், விண்ணப்பித்த நிறுவனங்களின் விலைமனுக்கள் 5 கோடி ரூபா முதல் 36 கோடி ரூபா வரை உள்ளன. ஆனால் ஏழு மடங்கு வேறுபாடு எவ்வாறு ஏற்பட்டது? அரசாங்கத்துக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் 17 கோடி ரூபாவையும், அதே நிறுவனத்துக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் சுமார் 6 கோடி ரூபாவையும் முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு 500 கமராக்கள் போதுமானதல்ல. அல்லது தங்களுக்கு விருப்பமான நிறுவனத்துக்கு குறைந்த விலையை முன்வைக்கச் செய்து, முதலில் குறைந்த எண்ணிக்கையிலான கமராக்களை கொள்வனவு செய்து, பின்னர் அதே நிறுவனத்துக்கு அதிக விலையில் அதிக கமராக்களை வழங்கும் முயற்சியா என்ற சந்தேகம் உள்ளது.
இந்தக் கமராக்களுக்கு இணைய வசதி வழங்கும் முறையும் கேள்விக்குரியது. இது அரசாங்கத்தின் இலத்திரனியல் மயமாக்கல் திட்டத்தின் பகுதியாக இருந்தால், அதன் ஏனைய பணிகளும் முறையற்றதாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.
அரசாங்கத்தின் இலத்திரனியல் மயமாக்கல் ஆலோசகராக இருக்கும் ஹான்ஸ் விஜேசூரியவுடன் தொடர்புடைய நிறுவனம் இதில் எவ்வாறு பெயரிடப்படுகிறது? இது நலன் முரண்பாடு அல்லவா?
இதற்கு உரிய விளக்கம் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். எனவே, இந்த அவசரமான விலைமனு கோரலை தொடர்வதற்குப் பதிலாக, அதனை நன்கு மீளாய்வு செய்து, தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று, முறையான விலைமனு கோரல் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதைத் தவிர வேறு தீர்வு எமக்குத் தென்படவில்லை என சுட்டிக்காட்டினார்.