(நமது நிருபர்)
இந்திய அரசின் நிதியுதவியுடனும் இலங்கை அரசின் அனுசரணையுடனும் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டம் ஊவ பரணகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அலகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் கௌரவமான வீடமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அதன்படி, மண்சரிவு அதிக ஆபத்துள்ள பகுதியில் கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நீண்டகாலமாக மண்சரிவு அபாயத்துக்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீட்டு சூழலையும் கௌரவமான வாழ்க்கைத் தரத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
ஒவ்வொரு வீட்டுக்குமான நிர்மாணச் செலவுக்காக இந்திய அரசாங்கம் 28 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளது. அத்துடன், மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் 4 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் நாடளாவிய ரீதியில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.