Our Feeds


Wednesday, September 30, 2026

ShortNews

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் எயார் பஸ் கொள்வனவுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனம் சவப்பெட்டிக்குச் சென்றது - பிமல்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் எயார் பஸ் கொள்வனவுக்கான ஒப்பத்தின் போதும் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் போதும் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது. இந்த மோசடியுடன் தொடர்புடைய பலர் இனிவரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

112 மெட்ரோ பஸ்களை சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (29) தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் எயார் பஸ் கொள்வனவுடன் இடம்பெற்ற ஊழல் மோசடியை தொடர்ந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனம் சவப்பெட்டிக்குச் சென்றது என்று குறிப்பிட வேண்டும்.

இந்த மோசடி தொடர்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. இந்த மோசடியை லண்டன் வணிக மேல் நீதிமன்றம் முதலாவதாக வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்தே இலங்கையில்  அது குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இருப்பினும் அரசியல் ஆதரவுடன் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனமும் இந்த கொள்வனவில் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. ஆகவே கைதுகளுக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அரசியல் பழிவாங்கலை தொடர் வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக நீதித்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சிலவேளை ஊழல்வாதிகளுக்கும், படுகொலையாளிகளுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம். அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக எதிர்க்கட்சியினரே நீதித்துறையின் சுயாதீனத்தை விமர்சித்தார்கள். பிரதம நீதியரசர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »