Our Feeds


Friday, September 4, 2026

Zameera

சட்டவாக்க சபையை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் - சந்திம வீரக்கொடி


 (எம்.மனோசித்ரா)



நிறைவேற்றதிகாரத்தின் அரசியல் தேவைகளுக்காகச் சட்டவாக்க சபையைப் பொம்மையைப் போலப் பயன்படுத்துவதையும், நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி வலியுறுத்தினார்.Politics


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நிறைவேற்றதிகாரத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே சட்டவாக்க சபை செயற்படுத்தப்படுவதைச் சர்வதேச சமூகம் தெளிவாக உணர்ந்துள்ளது.  அரசாங்கம் தனது அரசியல் இலக்குகளுக்காக நாட்டில் தேவையற்ற சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்த முற்படுகின்றனர்.


வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறினாலும், நடைமுறையில் பல முக்கிய நியமனங்கள் இழுபறியில் உள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.


பத்தேகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெற மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் புதிய நீதிபதியை நியமிக்க இயலவில்லை. மேலும், பொலிஸ் சேவையில் தெரிவுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.



65 வயது வரை பதவிப்பிரமாணம் செய்த நீதிபதிகளின் சேவைக் காலத்தை 67 ஆக உயர்த்த முற்படுவதன் மூலம், நீதிபதிகள் மீண்டும் புதிய பதவிப்பிரமாணம் செய்ய வேண்டிய அல்லது புதிய நியமனக் கடிதங்களைப் பெற வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் அரசாங்கம் தமக்கு விருப்பமான முறையில் சிரேஷ்டத்துவப் பட்டியலை மாற்றி அமைக்கும் வாய்ப்பைப் பெற முற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


நாட்டின் வரலாற்றில் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்ட அல்லது தமக்குச் சாதகமாக நீதிபதிகளை நியமித்த ஆட்சியாளர்கள் அனைவரும் இறுதியில் பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளனர். பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நீதிபதிகளை அவதூறுகளுக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்து, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து வெளிப்படைத்தன்மையுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »