(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜே.ஆர், ரணில் போன்றவர்கள் நாட்டுக்கு செய்த சேவைகள் தொடர்பில் அறியாமலே இளம் சமூகத்தினர் கடந்த தேர்தலில் தவறிழைத்துள்ளனர். தற்போது அதனை உணர்ந்து கைசேதப்பட்டு வருகிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்த்தன முன்னெடுத்த வேலைத்திட்டங்களே நாடு அபிவிருத்தியடைய காரணமாக இருந்தன. அவரின் வழித்தோன்றலில் செயற்பட்டு வந்த ரணில் விக்ரமசிங்க நாட்டை தொடர்ந்து அபிவிருத்தி செய்ய தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தார். அதனால் தற்போது இவர்கள் தொடர்பில் கதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களின் சேவைகள் தொடர்பில் அறியாமலே இளம் சமூகத்தினர், தற்போதைய ஆட்சியாளர்களை அதிகாரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தனர். என்றாலும் தற்போது அவர்கள், செய்த பிழையை உணர ஆரம்பித்துள்ளனர்.உள்ளூர் சுற்றுலா ஆராய்க
ஜே.ஆர். நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த நாட்டில் கல்வியியலாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு ஜே.ஆர், சர்வாதிகார போக்கில் செயற்பட்டார் என தெரிவிப்பவர்கள், அவர் நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதில்லை. கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு பாடசாலைகளை அமைத்து இலவச அச்சுப்புத்தகங்களை வழங்க எடுத்த நடவடிக்கைகளை இவர்கள் மறந்துள்ளனர்.
அதேநேரம் ஜே.ஆர் அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதி முறையை விமர்சித்து, அதனை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அனைவரும் இன்று வரை அதனை அனுபவித்து வருகிறார்கள். ஜே.ஆர் கட்டியெழுப்பிய இந்த நாட்டை மக்கள் விடுதலை முன்னணியே 70 வருடங்களாக கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை சீரழித்து வந்தது. தற்போது ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, பொய் பிரசாரங்களை நாட்டு மக்களை பிழையாக வழிநடத்தி வருகிறார்கள்.
மேலும் அன்று ஜே.ஆர் ஜயவர்தனவை சர்வாதிகாரி என தெரிவித்து வந்தவர்கள், இன்று அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தை தங்களுக்கு தேவையான முறையில் வழிநடத்தவே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்.