(செ.கவிஷனா)
பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எவ்வித தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் வியாழக்கிழமை (17) பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
அரசப் பல்கலைக்கழக அமைப்பில் நீடித்து வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த வாரத்தைக் ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டது.
இருப்பினும், பிரதமருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடல், வைக்கோல் போரில் ஊசியைத் தேடும் ஒரு வீணான முயற்சியைப் போல் அமைந்தது. பல்கலைகழக அமைப்பில் காணப்படும் சிக்கல்கள் என்ன என்பதும் அதற்கு என்ன தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே அரசாங்கத்துக்கும் தெளிவாக தெரிந்திருந்தும், அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க அரசாங்கத்து எவ்வித ஆர்வமும் இல்லை.
இலவசக் கல்வியின் எதிர்காலத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான பங்களிப்பாக இதைக் கருதாமல் அரசாங்கம் அலட்சியப்போக்கை காட்டுவது மிகவும் கவலையளிக்கிறது.
குறிப்பாக ஓராண்டுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் நிர்வாகக் குழு இணைந்து தயாரித்து அனுப்பப்பட்ட மாணவர் சேர்க்கையை விரைவுப்படுத்தும் முக்கிய யோசணை அறிக்கை இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கவில்லை எனப் பிரதமர் கூறியது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகையை அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உயர் கல்வியின் தரம் அழிவடைந்து செல்கிறது. நாட்டின் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் மேற்கொண்டு கல்வியை பற்றியைப் பேசுவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித தகுதியும் இல்லை என்றார்.