(இராஜதுரை ஹஷான்)
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைக்காக புகையிரத திணைக்கள பொது முகாமையாளரை பதவி நீக்க முடியாது. அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய பணிப்புறக்கணிப்புக்கு அடிபணிய போவதில்லை என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் புகையிரத சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ஊடகங்கள் தான் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு ஏதும் தெரியவில்லை. புகையிரதங்கள் வழமை போலவே சேவையில் ஈடுபடுகின்றன.
புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படுவதில்லை. ஆகவே பயணிகள் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இதனால் திணைக்களம் நிதியியல் ரீதியில் நட்டமடையும். பயணச்சீட்டு விநியோகிப்பதை சேவையாளர்கள் புறக்கணித்துள்ளதற்காக பொது பயணிகளின் போக்குவரத்து சேவையை இடைநிறுத்த முடியாது.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளரை பதவி நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். திணைக்களத்தின் பொது முகாமையாளர் அரச அதிகாரி. ஒரு தரப்பினர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதால் அரச அதிகாரியை பணி நீக்க முடியுமா. அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் அதனை அரச சேவைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கலாம்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் இந்த தொழிற்சங்கத்தினர் அண்மையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து, அறிக்கை வெளியிட்டார்கள்.சமகி புகையிரத சேவை சங்கம், பொதுஜன புகையிரத சங்கம் தான் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒரு தரப்பினரின் அரசியல் போராட்டங்களுக்காக புகையிரத திணைக்கள பொது முகாமையாளரை பதவி நீக்க முடியாது. ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் தொழிற்சங்கத்தினர் உரிய தரப்பில் முறைப்பாடளித்து தாபன விதிக்கோவைக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
புகையிரத சேவையை பாதுகாப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடுபதாக குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் ஏன் கடந்த காலங்களில் போராட்த்தில் ஈடுபடவில்லை. புகையிரத சேவையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவற்றை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றார்.