Our Feeds


Friday, October 2, 2026

Zameera

எரிபொருளுக்காக அரசாங்கம் அறிவித்த 4100 மில்லியன் ரூபா நிவாரணம் சாதாரண மக்களை சென்றடையவில்லை

 

(எம்.மனோசித்ரா)


எரிபொருளுக்காக அரசாங்கம் அறிவித்த 4100 மில்லியன் ரூபா நிவாரணம் சாதாரண மக்களை சென்றடையவில்லை. அது வெளிநாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விசனம் வெளியிட்டார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


நாட்டில் பணவீக்கம் 8.1 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 108.7 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் நிவாரணம் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், டீசல் 10 ரூபாவாலும், பெற்றோல் 15 ரூபாவாலும், சுப்பர் டீசல் 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


நிவாரணம் வழங்கி விலையை உயர்த்துவது இந்த அரசாங்கத்தின் புதிய நடைமுறையாக மாறியுள்ளதுடன், ஒதுக்கப்பட்ட நிதி இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே சென்றுள்ளது.


மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ளதாகக் கூறி அரசாங்கம் விலையை அதிகரித்தாலும், தற்போதைய எரிபொருள் இருப்பு மூன்று மாதங்களுக்கு முன்னர் பெறப்பட்டதாகும். துறைமுகத்தில் விதிக்கப்படும் 150 சதவீத வரியை நீக்கினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.


ஆனால், அத்தியாவசியப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான வட் வரிகள் குறைக்கப்படாமல் மக்கள் மீது மேலதிக சுமை சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன், நாட்டில் முதலீட்டுச் சூழல் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய பகுதியில் உள்ள மில்லேனியம் சிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை, ஆளுந்தரப்பிலுள்ள சிலர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியுள்ளனர். சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இத்தகைய சட்டவிரோத செயல்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரும் வாய்ப்பு முற்றாக இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »