Our Feeds


Tuesday, October 27, 2026

ShortNews

பாராளுமன்றக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்!


பாராளுமன்றக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்.

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுத் தொடரில் இளைஞர் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் அதற்காக இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர் சமூகத்தின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுகள் அண்மைக் காலத்தில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.

இந்தச் செயலமர்வுகளில் இளைஞர் யுவதிகளால் முன்வைக்கப்பட்ட பொதுவான பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

இளைஞர் சமூகத்தினால் அடையாளம் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுப் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக முன்வைப்பதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தொடர்புடைய விடயங்கள் குறித்து “இளைஞர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து” தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர் சமூகத்தின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றச் செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம் மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இக்கூட்டத்தில், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும், “Voice to Policy” செயலமர்வுத் தொடருக்கு ஒத்துழைப்பு வழங்கும் CII (Coalition for Inclusive Impact) மற்றும் NDI (National Democratic Institute) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »