(நமது நிருபர்)
தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள குழு தலைவர் எனவும் அறியப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன எனும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 4 வங்கிச் கணக்குகளுக்கு மேலதிகமாக இரு சொகுசு கார்களையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டாவை அங்கிருந்து விடுவித்து, பாதுகாப்பான சிறைச்சாலையொன்றிற்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ரகித்த ராஜபக்ஷஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், கொழும்பு நீதி்வான் நீதிமன்றத்தால் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், சந்தேகநபரால் பெறப்பட்டதாகக் கூறப்படும் 12 கோடி ரூபா இலஞ்சப் பணத்தைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.பயண வழிகாட்டி
இதனை அடுத்து, குற்றச்செயலின் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 4 வங்கிச் கணக்குகள் மற்றும் 2 அதிநவீன சொகுசு கார்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். முடக்கப்பட்ட வங்கிச் கணக்குகளில் சுமார் 4 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
மேற்படி சொத்துகள் முடக்கப்பட்டமை தொடர்பான எழுத்து மூல அறிவிப்பை வழங்குவதற்காக புலனாய்வு அதிகாரிகள் இராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள ரகித்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு சென்றபோதிலும், அவர் வீட்டில் இல்லாத காரணத்தால், குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
