இஸ்ரேலிய பாராளுமன்றத் தேர்தலில் அரபு சிறுபான்மை மக்கள் வெளிப்படுத்திய அரசியல் விவேகமும் வாக்களிப்பு அணுகுமுறையும் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாக மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை (31) வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேலில் அரபு தலைமைகளின் வழிநடத்தலில் செயற்படும் இரண்டு அரபு - இஸ்ரேலிய அரசியல் கட்சிக் கூட்டணிகளான ஹதாஷ் - தால் - பலாத் மற்றும் ராம் - ஐக்கிய அரபுப் பட்டியல் ஆகியவை முறையே 11 மற்றும் 8 ஆசனங்களைப் பெற்று, மொத்தமாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம், இஸ்ரேலிய அரசியல் அரங்கில் தம்மைப் புறக்கணிக்க முடியாத பேரம் பேசும் அரசியல் சக்தியாக அவை நிலைநிறுத்தியுள்ளன.
இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை கிடையாது. அங்கு பாராளுமன்றத்தின் ஊடாகப் பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியமைக்கும் முறையே நடைமுறையில் உள்ளது. எனவே, பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் ஆசனங்களும் அவற்றின் அரசியல் அணுகுமுறையும் ஆட்சியமைப்பிலும் அரசியல் தீர்மானங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.கலாச்சாரம் காண்
இலங்கையில் நண்பர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டது ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகவேயாகும். ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இலங்கைத் தமிழ் பேசும் வாக்காளர்கள் நடந்துகொண்ட விதம் வேறுபட்டதாக அமைந்தது. யாரோ, எவரோ எழுப்பிய அரசியல் கோஷங்களையும் பிரசாரங்களையும் கேட்டு, மக்கள் அலையில் அள்ளுண்டு சென்று தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதன் விளைவாக, இன்று பல மாவட்டங்களில் தமது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் யார், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்களை எவ்வாறு தொடர்புகொள்வது, அவர்களது அலுவலக முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்ன என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமை காணப்படுகின்றது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் வேட்பாளர்களின் அரசியல் தகைமை, பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம், மக்களுக்காக அவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் பேரம்பேசும் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் அவ்வாறான அரசியல் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தேர்தல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு வாக்களித்துள்ளனர்.
அதேவேளை, இஸ்ரேலில் வாழும் அரபு சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளின் அரசியல் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டுள்ளனர். தமது பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்துவதன் ஊடாகப் பாராளுமன்றத்தில் 19 ஆசனங்களைப் பெற்று, தமது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் ஆட்சியமைக்கும் தரப்புகளுடன் பேரம் பேசக்கூடிய அரசியல் வலிமையையும் பெற்றுள்ளனர்.இலங்கை செய்திகள்
எனவே, இஸ்ரேலிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த அரபு சிறுபான்மை மக்கள்தான், இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு இன்று அரசியல் பாடம் புகட்டியுள்ளனர் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
சிந்திக்கத் தெரிந்த அறிவுள்ளவர்கள் நான் கூறுவதன் முழுமையான அர்த்தத்தையும் அதன் அரசியல் உள்ளார்ந்த பொருளையும் புரிந்துகொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெறுமனே தேர்தல் வெற்றிக்கான எண்ணிக்கையாக மாத்திரம் அமையக்கூடாது. அவை அவர்களின் உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் எதிர்கால நலன்களை உறுதிப்படுத்தும் வலிமையான அரசியல் சக்தியாக மாற்றப்பட வேண்டும்.
அந்த வகையில், இஸ்ரேலில் வாழும் அரபு உடன்பிறப்புகளுக்கு எனது சலாம் என மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.
