Our Feeds


Wednesday, October 28, 2026

Zameera

அமெரிக்காவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் குறித்து அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - சம்பிக்க ரணவக்க

 

(எம்.ஆர்.எம்.வசீம்)


அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம்  கடந்த நான்கு மாதங்களில்  அமெரிக்காவுடன் பல கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


செவ்வாய்க்கிழமை (27) நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட போது பல்வேறு கதைகளை பரப்பிவந்தது. எரிவாயு சிலிண்டர்களைத் தூக்கிக்கொண்டு ஆங்காங்கே சென்றார்கள்; எரிவாயு வரிசைகளில் போராட்டங்களை உருவாக்கினார்கள்.


ஆனால் அந்த எரிவாயு தட்டுப்பாட்டை உருவாக்குவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தொழிலதிபர் இன்று ஜனாதிபதி அநுரகுமாரவுடனே இருக்கிறார். அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உள்ள மனு அமுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால்  முடிந்தால் அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உள்ள மனுவை வெளியே எடுக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம். இன்று அவரிடமிருந்து கிடைக்கும் நிதி உதவியில் வாழும் அதிகமானவர்கள் இந்த அரசாங்கத்திற்குள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களை வெளிப்படுத்த நான் எதிர்பார்க்கிறேன்.


மேலும் எமக்கு லாப் மற்றும் லிட்ராே ஆகிய இரண்டு வழிகள் ஊடாகவே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது,. லிட்ரோ நிறுவனத்திற்கே பிரதான விநியோக உரிமை உள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் ஒரு உள்நாட்டு நிறுவனமாக கட்டியெழுப்பப்பட்டது குறித்து நாம் அனைவரும் பெருமையடைந்தோம். அண்மையில் அதனை அனுர குமார திஸாநாயக்கவின் நெருங்கிய, சக்திவாய்ந்த தொழிலதிபர் ஒருவர் விலைக்கு வாங்கினார்.


இப்போது என்ன நடந்துள்ளது? இந்த நிறுவனம் ஈரானில் இருந்து எரிவாயு வாங்கியதாகக் கூறி, அமெரிக்காவினால் இந்த நிறுவனத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொம்மையாக இருக்கும் அநுர குமார திஸாநாயக்க இதற்காக எடுத்த நடவடிக்கை என்ன? அந்த நிறுவனத்தை அதிலிருந்து மீட்பதற்காக அநுர குமார, இன்றுவரை எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.


அடுத்து லிட்ரோ நிறுவனம்,. யாரிடமிருந்தும் எரிவாயு வாங்கத் தேவையில்லை, எங்களிடமிருந்து எரிவாயு வாங்குங்கள் என்று.ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார். அதன்படி இவர்கள் 'ஜியோ'  எனப்படும் அமெரிக்க எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயு வாங்கினார்கள்.


அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலை மனுவில், நான்கு சிறிய கப்பல்கள் மூலம் நமக்கு எரிவாயு விநியோகிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்திடம் மூன்று கப்பல்கள் மட்டுமே உள்ளன. அதன்படி அந்த நிறுவனத்தாலும் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. டொனால்ட் ட்ரம்பின் காலணிகளை நக்கும் அனுர குமார திஸாநாயக்கவிற்கு, அந்த நிறுவனத்தின் விலை மனுவை  ரத்து செய்யும் அளவுக்கு தைரியம் இல்லாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்.


அநுர குமார திஸாநாயக்க கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அமெரிக்காவுடன் பல கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதை வெளிப்படுத்த வேண்டும், ஏன்? இவர்கள் மக்களுக்கு முன்னால் பொய் இடதுசாரி கதைகளை பேசுகிறார்கள். பிரேசில் ஜனாதிபதி வெற்றிபெற்றவுடன்  அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததை நாங்கள் கண்டோம்.


பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா என்பவர் ஒரு இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர். அவர் சிவப்பு சட்டையைக் காப்பாற்றிய மனிதரே தவிர, சிவப்புச் சட்டையை ட்ரம்பிடம் அடகு வைத்த மனிதர் அல்ல. அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க அநுர குமாரவிற்கு எந்த உரிமையும் இல்லை.


இந்த ஆண்டின் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை அமெரிக்காவுடன் இணைந்து 'அட்லஸ் ஏஞ்சல்'  என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 24 முதல் 31 வரை திருகோணமலையில் 'கராத்தே' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல், காலியில் அமெரிக்காவுடனான இராணுவப் பயிற்சிகளுக்கான பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இந்த நான்கு மாதங்களில் இலங்கை பாதுகாப்புப் படைகள், அமெரிக்க பசிபிக் கமாண்ட் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து மூன்று நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இதனை ரணில் விக்ரமசிங்க செய்திருந்தால் எப்படி இருக்கும்? இதனை மஹிந்த ராஜபக்ஷ செய்திருந்தால் எப்படி இருக்கும்? அமெரிக்கர்களின் காலணிகளை நக்குவதனால்தான் நமது மக்களும், நமது பெண்களும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதற்குப் பயந்து அநுரகுமார திஸாநாயக்க இந்நாட்டை அமெரிக்காவுடன் ஒரு இராணுவக் கூட்டாண்மைக்குக் கொண்டு சென்றுள்ளார். இது மிகவும் ஆபத்தானது. உலகில் எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருப்பது நமக்குத் தெரியும். ஈரானிய கப்பல்களுக்கு கொஞ்சம் நீர் கூடக் கொடுக்காமல் இருக்கும் இழிவான அரசாங்கமே இது; அமெரிக்காவுடன் இருக்கும் இந்த ரகசிய ஒப்பந்தங்கள் காரணமாகவே  அரசாங்கம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


அரசாங்கம் இன்று ஒரு ரகசிய ராணுவக் கூட்டாண்மையில் உள்ளது. அந்த ரகசிய ராணுவக் கூட்டாண்மையின் எதிர்கால விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக அமையும். அதனால் எதிர்வரும் 12 ஆம் திகதி இந்நாட்டு மக்களுக்கு அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட இந்த அரசாங்கத்தில் உள்ள சில ஊழல்வாதிகளின் ஊழல்களையும், அவர்களின் பெயர்களையும் வெளிப்படுத்த நான் எதிர்பார்க்கிறேன். இவற்றை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் சில ஊடக நிறுவனங்களையும், யூடியூபர்களையும் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்தும் தெளிவுபடுத்த எதிர்பார்க்கிறேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »