இலங்கை–பாகிஸ்தான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்பு; Short News ஊடகவியலாளருக்கு இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிப்பு!
லாஹூர் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மற்றும் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு
பாகிஸ்தானின் முன்னணி வர்த்தக அமைப்புகளில் ஒன்றான லாஹூர் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிக்கும் (Lahore Chamber of Commerce and Industry), பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட சந்திப்பொன்று நேற்று (30) லாஹூரில் நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன (Rear Admiral Fred Seneviratne) மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஏ. கிறிஸ்டி ரூபன் (A. Christy Ruban) உள்ளிட்ட இலங்கைத் தூதரகப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
லாஹூர் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் அலி ஹுசாம் அஸ்கர் (Ali Hussam Asghar) உள்ளிட்ட பெருமளவிலான வர்த்தகப் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் இதில் பங்கேற்றனர்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துதல், இரு நாடுகளுக்கிடையிலான முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்புக்கு Short News ஊடகத்தின் சார்பில் பாகிஸ்தானில் தங்கியுள்ள எமது ஊடகவியலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், நிகழ்வின் பின்னர் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளையும் தனியாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இலங்கை–பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு, இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் பாகிஸ்தானின் சுற்றுலா மையங்களை இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்களும் பேசப்பட்டன.
இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிப்பு
இதேவேளை, தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண கிரிக்கெட் தொடரைச் செய்தியாக்குவதற்காகப் பாகிஸ்தான் சென்றுள்ள Short News ஊடகவியலாளர், தனது ஊடகப் பணியின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தானின் வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று அவற்றின் சிறப்புகளை காணொளிகள் மற்றும் பதிவுகள் ஊடாக இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றார்.
குறிப்பாக, பாகிஸ்தானின் சுற்றுலாத்தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களை இலங்கை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறை உறவுகளுக்கும் பங்களிப்புச் செய்து வருகின்றார்.
இந்தப் பணிகளைப் பாராட்டும் வகையில் லாஹூர் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி சார்பிலும், பஞ்சாப் சுற்றுலா சபை (Punjab Tourism Board) சார்பிலும் அவருக்கு இரண்டு விசேட விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரைச் செய்தியாக்குவதுடன், அந்நாட்டின் சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சிறப்புகளையும் இலங்கை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகப் பணிக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை–பாகிஸ்தான் மக்களுக்கிடையிலான நட்புறவையும், வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறைத் தொடர்புகளையும் வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பை இந்நிகழ்வு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
