Our Feeds


Sunday, November 1, 2026

Zameera

தென் கொரியாவில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழில் வாய்ப்பு; புதிய ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

 

(க.சிவலிங்கமூர்த்தி)


தென் கொரியாவில் இலங்கை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கும், கல்வியை நிறைவு செய்த பின்னர் அந்நாட்டின் கைத்தொழில் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதுடன், அங்கு நீண்டகாலம் வசிப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (02) கைச்சாத்திடப்படவுள்ளது.


தொழில் பிரதி அமைச்சரின் அலுவலகம் இன்று (01) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தினால் தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்களுக்கு, தென் கொரியக் குடியரசின் சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.



இதற்கமைய, குறித்த நிறுவனத்தினால் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தென் கொரியாவின் சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தென் கொரியாவின் கியோங்சங்னம்-டோ மாகாணத்திலுள்ள கைத்தொழில் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.


அத்துடன், கல்வியை நிறைவு செய்து தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் குறித்த மாகாணத்தில் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடந்த 30ஆம் திகதி தென் கொரியாவுக்குப் பயணமானார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் அண்மையில் கிடைத்துள்ளது.


தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, இலங்கை தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் துமிந்த ஜயலத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தென் கொரியாவுக்குப் பயணித்துள்ளனர்.


இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில் அமைச்சு, இலங்கை தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென் கொரியக் குடியரசின் கியோங்சங்னம்-டோ மாகாணம், சச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், சாங்ஷின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினருக்கும் இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், கல்வியை நிறைவு செய்த பின்னர் அந்நாட்டின் கைத்தொழில் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், கியோங்சங்னம்-டோ மாகாணத்தில் நீண்டகாலம் வசிப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »