இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் பலத்த காயமடைந்த பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் இன்று (01) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் (MRCC Colombo) ஒத்துழைப்புடன் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
MV Spirit of Tokyo என்ற குறித்த சரக்குக் கப்பல், இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் (Search and Rescue Region – SRR) பயணித்துக்கொண்டிருந்தபோது, கப்பலில் இடம்பெற்ற விபத்தொன்றில் பணியாளர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதற்கமைய, முதற்கட்டமாக காயமடைந்த பணியாளருக்கான மருத்துவ ஆலோசனைகளை கடற்படையினர் கப்பலுக்கு வழங்கியதுடன், காலி துறைமுகத்தை நோக்கிப் பயணிக்குமாறும் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் அனுப்பப்பட்ட P 451 என்ற விரைவுத் தாக்குதல் படகு, காலி துறைமுகத்திற்கு அப்பால் குறித்த கப்பலைச் சென்றடைந்து, காயமடைந்த பணியாளரைப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வந்தது.
கப்பலின் உள்ளூர் முகவரின் உதவியுடன், காயமடைந்த பணியாளர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் அவசர நிலைகளை எதிர்கொள்ளும் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு உதவுவதற்காக கடற்படையினர் தொடர்ந்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
