(நமது நிருபர்)
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்காக கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலைகளில் கற்றல் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாவது,
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மூன்றாம் மற்றும் நான்காம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையும், ஐந்தாம் தரம் முதல் உயர்தரம் வரையான வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டின் தொடக்கத்தில் முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக, அடுத்த ஆண்டு இரண்டாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, புதிய பாடத்திட்ட முறையை மாணவர்கள் ஒவ்வொரு தரமாக முன்னேறிச் செல்லும்போது கட்டம் கட்டமாக விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்தாம் தரத்துக்கு வரும் ஆண்டில், அந்தத் தரத்துக்கும் புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும், புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்களை 2030ஆம் ஆண்டு முதல் சாதாரண தரத்திலும், 2033ஆம் ஆண்டு முதல் உயர்தரத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்பட்டுள்ளது.
