Our Feeds


Wednesday, November 4, 2026

Zameera

நாட்டின் வீழ்ச்சிக்காக எதிர்க்கட்சி காத்திருக்கிறது - அமைச்சர் சரோஜா போல் ராஜ்

 

உலக பொருளாதாரம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், நாடு வீழ்ச்சியடைவதற்காக எதிர்க்கட்சி காத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறானதொரு வீழ்ச்சியைக் காண  எதிர்க்கட்சி இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில்  நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில்  உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தொடர்பில்  சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


நீதிமன்றத்தினால் ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியாது. குறித்த பிரேரணையில் திருத்தங்களை மேற்கொண்டு, பாராளுமன்ற செயலகத்தின் ஆலோசனைகளையும் உள்வாங்கி மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்றக் குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 


எனினும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறி இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை எதிர்க்கட்சியின் அரசியல் வங்குரோத்து நிலையையே வெளிப்படுத்துகிறது


அதேநேரம் 2024ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் ஆரம்ப மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவை ஏற்றுமதித் துறைக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


நாட்டின் பாரம்பரிய ஏற்றுமதித் துறைகளுக்கு அப்பால், புதிய ஏற்றுமதிச் சந்தைகளையும் துறைகளையும் அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குதல், போக்குவரத்து மற்றும் காப்புறுதிச் செயற்பாடுகளை இலகுபடுத்துதல், ஏற்றுமதி நடைமுறைகளை டிஜிட்டல் மயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


திறமையான தொழிலாளர்களுக்கு சர்வதேச தேவை அதிகரித்துள்ளதுடன், இலங்கையின் சேவை ஏற்றுமதித் துறையின் மீதும் சர்வதேச மட்டத்தில் அதிக நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இது நாட்டுக்குக் கிடைத்துள்ள முக்கியமான சாதனையாகும். கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட தடைகள், எரிபொருள் விநியோகப் பிரச்சினைகள் மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்புகள் தொடர்பான சவால்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டோம். எனினும், அந்த நெருக்கடிகளின் முழுமையான தாக்கமும் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் அவற்றை முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது.



உலக பொருளாதாரம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், நாடு வீழ்ச்சியடைவதற்காக எதிர்க்கட்சி காத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறானதொரு வீழ்ச்சியைக் காண  எதிர்க்கட்சி இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டமும் இன்றி எதிர்க்கட்சி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், மக்களைத் தவறாக வழிநடத்தி இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »