Our Feeds


Sunday, November 1, 2026

Zameera

கடவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சிறுவனின் தாயார் தெரிவித்த தகவல் தவறானது - பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர்

 

(நமது நிருபர்)


கடவத்தையில் முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய், போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம் உண்மைக்குப் புறம்பானது என உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.


சீருடையில் இருக்கும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காண்பித்தால். அவ்வாகனத்தை முன்னோக்கி செலுத்தாது நிறுத்த வேண்டும். மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் பொலிஸார் கைது , சுற்றிவளைப்புகள், சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன இடம்பெறுகின்ற நிலையில் அவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம், துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களுக்குத் அடைக்களம் வழங்குவோர் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். ஆகையால் அவர்களை கைது செய்ய பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


குறிப்பாக, கடவத்தையில் நடைபெற்ற சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் போதைப்பொருள் சேகரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவலாகும். கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எனினும் உண்மைக்குப்புறம்பான, உறுதிப்படுத்தப்படாத, அதேபோல் மக்களைத் திசைதிருப்பும் அல்லது அச்சத்துக்குள்ளாக்கும் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.


சிறுவர்கள் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்குவது குற்றமாகும். எனவே, கடவத்தையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, முச்சக்கர வண்டியைச் செலுத்துவதற்கு அனுமதி வழங்கிய நபர்களுக்கு எதிராகவும் மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »