Our Feeds


Showing posts with label #u. Show all posts
Showing posts with label #u. Show all posts

Friday, June 26, 2026

Zameera

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைக் குறைப்பின் பலன் எதிர்காலத்தில்


 சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். 


இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இதுவரை அரசாங்கம் எரிபொருளுக்காக 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


அதற்கமைய, மீண்டும் அந்த மானியத்தை வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையினால், அதற்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் சற்று அதிகரிக்க நேரிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 


அந்த உயர்ந்த எரிபொருள் விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போது நாட்டில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவை என்பதால், எதிர்காலத்தில் முன்பதிவு செய்யப்படும் எரிபொருளுக்காக அதன் செலவை ஈடுசெய்து, அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


"போர்ச் சூழலுக்கு முன்னிருந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. உதாரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை நாங்கள் இறுதியாக 64-65 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையிலேயே பெற்றுக்கொண்டோம். அது 125 டொலர்கள் வரை அதிகரித்தது. அக்காலகட்டத்தில் விலை இருமடங்காகிய போதும், நாமும் விலையை இருமடங்காக அதிகரித்து இலாபம் உழைக்கும் இடத்திற்கு செல்லவில்லை. அன்று நாம் நிலவிய விலைகளிலேயே எரிபொருளை வழங்கவே முயற்சித்தோம். 


விலை அதிகரிப்பை கூட நாம் மிகுந்த புரிதலுடன் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொண்டோம். ஆனால், தற்போது அந்த உயர்ந்த விலை 125 டொலர்களிலிருந்து குறைந்து, 70 டொலர்கள் என்ற மட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த விலைகளுக்கமைய செலவுகளை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் கிடைக்கும்போதுதான், அதன் நன்மையை எம்மால் மக்களுக்கு வழங்க முடியும். 


இப்போது பெறப்படும் எரிபொருள், குறிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ளவை, கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவையாகும். தற்போது எம்மால் இந்தச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாததால், 100 பில்லியன் ரூபா தொகுப்பிற்குள் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இதற்கான மானியத்தை வழங்கினோம். 


இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியம் முடிவடைகிறது. தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து, விலை மாற்றங்களைச் செய்துவிட்டு, மீண்டும் மானியம் வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிப்போம். 


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க நாங்கள் தயாரில்லை. அந்த நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.

Friday, June 19, 2026

Zameera

பெண் சடலமாக மீட்பு: சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்


 (நுவரெலியா நிருபர்)


நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் (வயது 33), அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த  உடற்பயிற்சி நிபுணர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நுவரெலியா பொலிஸார், சந்தேக நபர் பற்றிய விபரங்களை தெரிவித்து உதவுமாறு கோரியுள்ளனர். 


நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர், கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரிலிருந்து  நேற்று புதன்கிழமை (17) மாலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


அந்தப் பெண், நுவரெலியாவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் பல நாட்கள் இரண்டு முறை தங்கியிருந்தமையும் நுவரெலியா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பெண்ணுடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரே இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.


சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அந்த இளம்பெண்ணுடன் விடுதிக்குச் சென்று, புதன்கிழமை (10) விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ளார். 


அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (16) அந்த பெண் மாத்திரம் தனியாக விடுதிக்கு சென்றுள்ளார். அதனையடுத்து, நேற்று புதன்கிழமை (17) இரவு 9 மணியளவில், சந்தேக நபர் வாடகைக் காரில் விடுதிக்கு சென்று, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுதிப் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்து, அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு சென்று, காரில் ஏற்றிப் புறப்பட்டுள்ளார். 


விடுதியிலிருந்து காரில் புறப்படுவதற்கு முன் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்த சம்பவம் குறித்து விடுதிப் பாதுகாப்பு அதிகாரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.


அதனையடுத்து, விசாரணை நடத்திவரும் நுவரெலியா பொலிஸார் கூறுகையில், உயிரிழந்த பெண், அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வந்ததாகவும் அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


2023 முதல் மருத்துவமனையில் அந்தப் பெண் பணியாற்றிவிட்டு வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறி, தனது வேலையை ராஜினாமா செய்வதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் பொலிஸார் தெரிவித்தனர்.


அவரது காதலரான சந்தேக நபர் கன்னொருவவைச் சேர்ந்த 35 வயதான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க, தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்து, அவரை  விடுதியிலிருந்து வெளியே கொண்டுசென்று,  அவரது உடலை ஒரு காரில் ஏற்றி, கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்த காரில் விட்டுச் சென்றதன் பின்னர், இது தொடர்பாக தெல்தெனிய பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.


காதலனான சந்தேக நபர் அப்பெண்ணின் முகத்தை மூடியபடி அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


எனினும், அந்தப் பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற சந்தேக நபரை இதுவரை கைது செய்யவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


அதனைத் தொடர்ந்து, சந்தேக நபரின் புகைப்படங்களை நுவரெலியா பொலிஸார்  வெளியிட்டு, சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள், நுவரெலியா பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க நுவரெலியா பொலிஸ் நிலையத்தின்  பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுத்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


071- 8591096 - உதவி பொலிஸ் கண்காணிப்பாளர், நுவரெலியா


071- 8591097 - தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர், நுவரெலியா

Wednesday, January 14, 2026

Zameera

அரச சேவையில் 26,095 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்


 (எம்.மனோசித்ரா)

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய பல்வேறு அரச துறைகளில் 26,095 ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங் கண்டு அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 442, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 452, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 705, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 10, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 37, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 76, பாதுகாப்பு அமைச்சுக்கு 102, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கு 19, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 10 ஆட்சேர்ப்புக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 01, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 166, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 167, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு 33, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 50, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 23, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 248, மத்திய மாகாண சபைக்கு 203, வடமத்திய மாகாண சபைக்கு 06, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 01 மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான ஆசிரியர்கள் 23,344 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Wednesday, April 9, 2025

Zameera

நாங்கள் எந்த நாட்டிடமும் மண்டியிட மாட்டோம்


 எந்த நாட்டின் முன்னாலும் நாங்கள் மண்டியிட மாட்டோம் என்றும் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினூடாக எந்தக் காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (08) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘இந்தியப் பிரதமரின் விஜயத்துடன் 07 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டோம். சுகாதாரம், மின்சக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், கிழக்கு மாகாண அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்காகவே இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஆனால், இந்த ஒப்பந்தத்தினூடாக நாட்டை காட்டிக்கொடுத்துள்ளோம் என்றும் கூறுகிறார்கள். இவற்றில் நீண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நீண்டகால பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒருசில ஒப்பந்தங்கள் எங்களின் அரசாங்கத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டவை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுதொடர்பில் கவனம் செலுத்தி அநேகமான மாற்றங்களை செய்துள்ளோம்.



நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இருக்கின்றன. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இதில் கைச்சாத்திட நடவடிக்கை எடுத்தோம். இந்திய சமுத்திர வலய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொறுப்பு இருக்கிறது. அதற்கமைய, இருநாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகள், பாதுகாப்பு அமைச்சுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அரசாங்கத்துக்கு முன்வைத்ததன் பின்னரே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். இதில் பயங்கொள்ள எதுவுமில்லை. தேவைக்கு ஏற்றாற் போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக இந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு அப்பால் செயற்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்திரமே. இவற்றில் எந்த ஒப்பந்தமும் நாட்டுக்கு விரோதமானவை அல்ல. விரோதமான ஏற்பாடுகளை நீக்கிவிட்டே நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம்.

நாங்கள் கடந்த அரசாங்கங்களைப் போன்றல்ல. எந்த நாட்டின் முன்னாலும் மண்டியிட மாட்டோம். மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்வதே எங்களின் அவசியமாகும். தற்போதைய ஜனாதிபதியின் கடந்த கால வெளிநாட்டு விஜயங்களின்போது எங்களின் நிலைப்பாடுகளை தெளிவாக அறிவித்திருந்தோம். நாட்டு மக்களுக்காக நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளோம். ஏற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அவற்றை தெளிவாகக் கூறியுள்ளோம். வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் சகல சலுகைகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றை பொறுப்பேற்கும் அரசாங்கமும் நாங்கள் இல்லை. இதனூடாக எந்த காட்டிக்கொடுப்பும் இடம்பெறாது’’ என்றார்

Thursday, February 27, 2025

Zameera

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்




 பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (27) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கடந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்த மூன்று வினாக்களை ஒத்த மூன்று வினாக்கள், பரீட்சைக்கு முந்திய தினம் குருநாகல் பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் தனது மேலதிக வகுப்பு சமூக ஊடகக் குழுவில் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்வதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த மூன்று தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், சம்பவத்துடன் தொடர்புடைய மனுவின் பதின்மூன்றாவது பிரதிவாதிக்கு, மூன்று மில்லியன் ரூபாவும் ஆறாவது மற்றும் ஒன்பதாவது பிரதிவாதிகள் என குறிப்பிடப்பட்டவர்களால் 2 மில்லியன் ரூபாவும் அரசாங்கக் கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களின் அடிப்படையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசியக் கிளையினூடாக மட்டுமே உரிய வினாக்களைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளுதல், அந்தச் செயற்பாடுகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கிளையிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், இரகசியக் கிளைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் கடுமையாகப் பரிசோதித்தல், வினா தயாரிப்பு குழக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேரப்புச் செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் மூலம் ஒரு வளவாளர் தொகுதியையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளில் ஒருவரான தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரை வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து உடனடியாக நீக்கி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு விசாரணை முடிவை தெரிவிப்பதற்கும், சம்பளம் இன்றி பணியை விட்டு இடைநிறுத்துவதற்கும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் தெரியவந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஆசிரியரும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் ஒழுக்காற்று அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, அந்த ஆசிரியரின் முழு சேவைக் காலத்திற்கும் நடைமுறைக்கு வரும் வகையில் பரீட்சைக் கடமைக்குத் தடை விதிக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அவரது ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிஉல்ல வலய அலுவலகத்தினால் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி, ஏற்கனவே அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புலமைப்பரிசில் வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு நிகரான வினாக்களை தனது வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்ட குருநாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலையின் ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்தும் ஒருவருக்கு ஐந்து வருட பரீட்சை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால், பரீட்சைக்கு தோற்றிய எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பரீட்சைக்கு முன் கலந்துரையாடப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கி வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ததால் பரீட்சை மதிப்பீடு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், 2024.12.31 ஆந் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின்னர், வினாத்தாள் மதிப்பீட்டு பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதற்கான வெட்டுப்புள்ளிகளை மிக விரைவில் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.