இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்குடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பில் கடந்த (16) புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதில், இருதரப்பு இணக்கப்பாடுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
சுற்றாடல் சார்பான திட்டங்களை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை வலியறுத்திய அமைச்சர், காலநிலையை பாதுகாக்கும் சதுப்பு நிலத்திட்டங்கள் குறித்தும், அமெரிக்க தூதுவரின் அவதானத்துக்கு கொண்டு வந்தார்.
மேலும்,சுற்றாடல் அமைச்சின் செயற்பாடுகளை ஆக்கத்திறனுள்ளதாக்கும் பொருட்டு, அமைச்சின் கட்டடங்களை உச்ச தரத்தில் நிர்மாணிப்பது பற்றியும் இவ்விருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாநாடு இன்னும் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் நடைபெறும் ஜி 20 மாநாடுகளின் தீர்மானங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக உணவுப் பஞ்சம் குறித்து எச்சரிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்களிலும் இச்சந்திப்பு கவனம் செலுத்தியது.
மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்றரை வயது குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
அயலவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த குடும்பத்துக்கும் சந்தேக நபரின் குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த பயன்படுத்திய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது.
எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
இதற்காக வருகிற செவ்வாய் கிழமை நவம்பர் 15ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் ஒன்று கூடுமாறு கட்சித் தலைவராகிய உங்களை அன்போடு அழைக்கிறோம். காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நீங்கள் சமூகம் தருவீர்கள் என்று நம்புகிறோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் சீதவாக்கை பிரதேச சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி, கடந்த வெள்ளிக்கிழமை (11) அவர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்.
பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ரங்கே பண்டார, பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தம்மிடமோ அல்லது கட்சியினரிடமோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தமது கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு கட்சி என்ற வகையில் நிதியமைச்சின் எந்தவொரு இராஜதந்திர தலையீடுகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபடாது என்றும் ரங்கே பண்டார கூறினார்.
கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்று தெரிவித்த அவர், பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றார்.
எட்டாவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 12 ஆண்டுகளின் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
சம்பியனை தீர்மானிக்கின்ற மாபெரும் இறுதிப்போட்டி இன்றைய தினம் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.
அதன்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ஓட்டங்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்நது களமிறங்கிய மொகமட் ஹரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ஓட்டங்களைக் குவித்த பாபர் அசாம் 32 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து வந்த இப்திகார் அகமட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.
பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 121 இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். , அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் ஓட்டங்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 138 ஓட்டங்கள் பெற்றால் டி20 உலகக்கிண்ணத்தை வெல்லலாம் என்ற நோக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த வகையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டுக்கான எட்டாவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் தலா ஒரு தடவை சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளாகும். பாகிஸ்தான் 2009ஆம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை கைப்பற்றியதையடுத்து இங்கிலாந்து அல்லது பாகிஸ்தான், இவற்றில் ஏதேனும் ஓர் அணி இரண்டாவது அணியாக இரு உலகக்கிண்ணங்களைக் கைப்பற்றவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையில் இதுவரையில் நடைபெற்றுள்ள இருபதுக்கு 20 போட்டிகளில் 17 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றிருக்கிறது.
இரு அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ண மோதலில் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. கடந்த 1992ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன்.
இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் "வறுமை" பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் "உணவின்மை", நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.
ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.
இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.
நாட்டில் வாகனங்களின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வட்டி வீத அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலைமை காரணமாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு நிலையான விலை இல்லை.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் நாட்டில் வாகனங்களின் விலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தன. இதனால் வாகன விற்பனையும் குறைந்தது என்று தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவியை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டுக்காக ஆசிரியர் ஒருவரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகளை ஆசிரியர் தொடர்ந்தும் தாக்கியதாக குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிறுமி தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியர் சிறுமியின் வகுப்பாசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் செல்லுபடியாகும்.
அவர்களிடமிருந்து ஏதேனும் தொகை அறவிடவேண்டியிருந்தால், அதனை சட்டரீதியாக வெளியேறுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காததைத் தவிர வேறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலான காலவரையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்ற அல்லது வெளிநாட்டுப் பயணத்தின் போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மோசடியான முறையில் தயாரித்து வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதை குடிவரவுத் திணைக்களம் உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். R
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.நா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய 3.4 மில்லியன் பேருக்கு தற்போது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார், சிறு குழந்தைகள் உள்ளிட்ட 2.4 மில்லியன் பேருக்கு உணவினை வழங்குவதற்கும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மீனவ சமூகத்தினருக்கு உதவிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
“உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும், அடக்கம் செய்யவும் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிய போதிலும், எங்களது ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்து படுபாதகச் செயல்களைச் செய்தார்கள். அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஜனாதிபதி ஒர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுகின்றேன்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாடு ,புத்தளம் கே.ஏ, பாயிஸ் ஞாபகார்த்த மண்டபக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (7) நடைபெற்றபோது அங்கு பிரதான உரையை ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பல விதமான விபரீதங்கள் இந்த கட்சிக்குள் நிகழ்ந்தாலும், இந்த இயக்கம் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சந்தித்த சவால்களுடன்,2020 மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு சேர்த்து நிறைய அட்டூழியங்களையும், அநியாயங்களையும் நாம் அனுபவித்தோம்.
சஹ்ரான் என்கின்ற பயங்கரவாதி எங்களுக்குள் ஒளிந்திருந்தான் என்பதை நாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ,அந்த படு பாதகச் செயலை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் ; அதிகமான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அவர்களது அரசியல் களம் பக்கச்சார்பாக இயங்குவதற்குச் சாதகமாக , திட்டமிட்டு நடந்த பயங்கரவாத தாக்குதலை அடைப்படையாக வைத்து இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது. இப்படியான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒரு ஜனாதிபதித் தேர்தலை முன்னிருத்தி,இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை உசுப்பேத்தி அட்டுளுகம ,அக்குரணைபோன்ற இடங்களை மாதக்கணக்கில் முடக்கினார்கள். அரச சார்பு ஊடகங்கள் முஸ்லிம்களை பிழையான கோணத்தில் காட்டி பிரசாரம் செய்தன.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஜனாஸாக்களை எரிக்கவும் முடியும் அடக்கம் செய்யவும் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்த போதிலும், எங்களது ஜனாஸாக்களை எரித்து படுபாதகச் செயல்களை செய்தார்கள். அந்த அவஸ்தைக்கு மத்தியில், இந்தப் பேராளர் மாநாட்டின் மூலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஜனாதிபதி ஒர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன். இவ்வாறான அநியாயம் இந்த நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் பலவந்தமாக இனிமேல் ஒருபோதும் நிகழ்த்தப் பட கூடாது.
தமிழ் மக்களுக்கு 30 வருட யுத்தத்தின் போது, நடந்த அநியாயங்களை நினைவு கூர்வதற்காக ஜெனிவாவில் முறைப்பாடுகள் தொடர்ந்தும் திரும்ப திரும்ப செய்யப்படுகின்றன. அநீதி இழைக்கப்பட்ட எங்களின் சார்பிலும் அவ்வாறான முறைப்பாட்டை ஜெனிவாவில் பிரேரணையை முன்மொழிந்த நாடுகள் உள்வாங்கின.
இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிப்பதை தவிர்ந்து கொண்டதும் ,எதிராக வாக்களித்ததற்கு காரணமாக அமைந்ததும் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கின்ற அந்த பிரேரணையாகும்இவற்றையெல்லாம் செய்து விட்டு, எல்லா அரபு நாடுகளின்தூதுவர்களும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்களும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் போட்ட ஜனாதிபதிக்கு ஈற்றில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். சதிகாரர்களை மிகைத்த சதிகாரன் மேலே இருக்கின்றான் என்பதில் முஸ்லிம்களான நாம் நம்பிக்கை கொண்டவர்கள் .
இந்த ஜனாதிபதி யாருடைய தயவில் ஜனாதிபதியானார் என்பது பிரச்சினையல்ல. ஆனால் , இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு விடிவு காண வேண்டும். விடிவுக்காக முயல்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்த பொருளாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்கின்ற போது, அவரின் அவ்வாறான முயற்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கவில்லை.
ஆனால், இன்று ஏராளமான விவசாயிகள் தங்களுக்கு உரம் , மானிய விலைக்குக் கிடைக்கும் உரிய நேரத்திற்கு கிடைக்கும் என்று இன்னும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்கள். “பெரும்போகத்தில் தருவோம் ” என்று வழங்கிய வாக்குறுதி இன்னும் சரியாகவில்லை. சிறுபோகத்தின் விளைச்சலை சந்தை படுத்த மக்கள் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். நெல்லைஉரிய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்த்த அரசாங்கம் அதை சரியான முறையில் கையாண்டதாக காணவில்லை.
இந்த அரசாங்கம் எங்களது ஜனநாயக உரிமைகளின் மீது கை வைப்பதை முஸ்லிம் காங்கிரஸ் காட்டமாகக் கண்டிக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை தடை செய்வதற்கும்,சிவில் சமூக உரிமைகளில் ஈடுபடுவோரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவித்து கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனாலும், இந்த பொருளாதார நெருக்கடியை கையாளும் முயற்சிகளில் உளப்பூர்வமாக ஜனாதிபதி செயல்பட்டார். அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றோம். ஆனால், சர்வ கட்சி அரசாங்கம் என கூறிக் கொண்டு உறுப்பினர்களை பின் கதவால் பறித்தெடுத்து அவ்வாறான போர்வையில் ஆட்சி அமைக்கின்ற அநியாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப் போவதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த பேரியக்கம் வெறும் அமைச்சு பதவிகளுக்கு சோரம் போகும் இயக்கமல்ல. இந்த இயக்கம் அமைச்சு பதவிகளால் வளர்ந்த இயக்கமுமல்ல.இப்போது எதிர்கட்சியில் இருந்தபோதிலும் கூட, விரியத்துடன் இந்த சமூகத்தின் நலன்களுக்காக மாறி மாறி ஆட்சியை தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாக இந்த இயக்கம் வாழ வேண்டும்.
சர்ச்சைக்குரிய விடயமான முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிடும் கூட்டத்தினர் இருக்கின்றனர். இதில் ஒரு விடயத்தில் நாம் உடன்பட்டுக் கொள்ள வேண்டும். எங்களது பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை நாங்கள் கண்டு கொள்வது இல்லை. காதி நீதிமன்றத்துக்கு முன்னாள் நம் பெண்கள் படும் அவஸ்த்தையை நம்மில் எத்தனை பேர் கண்டுள்ளோம் என்பது தெரியாது.
இந்த சீர்கேடுகள், பிரச்சினைகள் என்பன காரணமாக மாற்றுத் தரப்பினர் கையில் இன்று இந்த “ஆயுதம் ” போகின்றது. இதை சமூக ஆர்வம் கொண்ட பல அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து இஸ்லாத்தின் தனியார் சட்டத்துக்கு அமைவாக எங்களது முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகளைக் களைந்து சரியான முறையில் இந்த முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் ஒரு நிறைவுத் தன்மையோடு, மார்க்கச் சட்டத்தை விட்டுக் கொடுக்காமல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
எங்களை பொறுத்தமட்டில் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாக வேண்டும். இளைஞர்கள் மத்தியில் அரசியல் வாதிகள் சம்பந்தமான பார்வை வித்தியாசமானது. அடுத்த தேர்தலில் வயது முதிர்ந்த ஆறு அரசியல் வாதிகளுக்கு சிறிது கஷ்டம்தான். அனைத்து கட்சிகளும் அரசியல் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இளம் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். நமது கட்சி மிக பலம் பெறுகின்ற ஒரு சந்தர்ப்பம் வரும். அடுத்த பரம்பரைக்கான ஓர் இயக்கமாக இதை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகள் தொடரும். அதே நேரம் இந்த இயக்கம் பயணிக்கும் பாதையில் எந்தத் தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் மீறி வெற்றி கொள்கின்ற முயற்சியில் எங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக என்றார்.
மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர், அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக நவம்பர் 8 ம் திகதி இரவும் 9 ம் திகதி அதிகாலையும் இலங்கையர்களை அதிகாரிகள் கரைக்கு கொண்டுவந்து மூன்று இடங்களில்Vung Tau city, district. Xuyen Moc and Dat Do அவர்களை தங்கவைத்துள்ளதுடன் உணவு அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.
அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் பதற்றமின்றி காணப்படுகின்றனர் சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள் நூறிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.
இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.
தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
நவம்பர் ஆறாம் திகதி மதியம் ஹெலியோஸ் லீடர் கப்பல் 303 இலங்கையர்களை காப்பாற்றியவேளை அவர்களுடைய கப்பல் ஏற்கனவே 40 மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையில் காணப்பட்டது.
அந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தாங்கள் தங்கள் நாட்டிலிருந்து மியன்மார் சென்று அங்கிருந்து படகு மூலம் பயணித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு imo வுங் டாவுவில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்ட தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக இந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவர்களில் மூவர் ஒரு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 78 பேர் 15 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஐஎஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.