
இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு இலங்கை வருகை
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து கொழும்புக்கு வர உள்ளனர்.
இந்த குழு, பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்ய உள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இந்த குழு இலங்கையில் தங்கியிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.