
மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி
நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுங்கள் என்ற தொனிப்பொருளில் சில செய்திகள் ஊடகங்களிலும், சமுக வலைத்தளங்களிலும் அண்மைக்காலமாக பரவி வருகின்றது.
இதனை வாசிப்போர் எல்லா கிராம உத்தியோகத்தர்களும் தவறு செய்கின்றனர் என்ற மனப்பதிவைப் பெறுகின்றனர். இதனால் நேர்மையான கிராம உத்தியோகத்தர்கள் பலர் பெரும் மனக் கவலை அடைந்துள்ளனர்.
பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே கிராம உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட உள்ளன.
அனர்த்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒருசில நாட்களில் கிராம உத்தியோகத்தர் நேரில் சென்று அவதானிப்பது என்பது சிரமமான காரியம். மனச்சாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக் கொள்வர்.
அரசியல்வாதிகள் மக்களைக் கவரும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். ஆனால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சில மட்டுப்பாடுகள் உள்ளன.
எனவே கிராம உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் அறிக்கைக்கேற்ப செயற்படுவதா, சுற்றறிக்கைக்கேற்ப செயற்படுவதா என்ற கேள்வி உள்ளது.
சுற்றறிக்கையை மீறி அரசியல்வாதிகளின் செய்திகளுக்கேற்ப செயற்பட்டால் கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமது தொழிலையும் பாதுகாக்கும் வகையிலேயே கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டியுள்ளது.
எனவே, அறிக்கைகள் வெளியிடுவோர் தவறு செய்வோருக்கெதிராக முறைப்பாடு செய்யுங்கள் என்ற வகையிலேயெ வெளியிட வேண்டும்.
எல்லோரையும் பாதிக்கின்ற வகையில் அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
சில கிராம உத்தியோகத்தர்களது குடும்பங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதை ஒரு புறம் வைத்து விட்டுத்தான் இவர்கள் பணி புரிகின்றார்கள். கிராம உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக தமது பிரிவுக்கு மேலதிகமாக சிலர் இன்னொரு பிரிவையும் கவனிக்கின்றனர். இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் ஏனைய சில சேவையாளர்களை ஒப்பிடுகையில் குறைந்த சம்பளமே பெறுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்
எனவே, ஒட்டு மொத்த கிராம உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படும் வகையில் செய்திகளை வெளியிடாது தவறு செய்வோர் குறித்து மட்டும் தகவலைச் சேகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது பொருத்தம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.











