எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்
அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும்
வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது நம்பிக்கையில்லா
பிரேரணை தாக்கல் செய்ய எதிர்க்கட்சி சரியான சூழ்நிலையை உருவாக்கியிருந்த போதும்
ரத்தன தேரர் அதனை குழப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே இங்கு
குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேரரின் உண்ணாவிரதத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட
அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தவிர்த்துவிட்டதாகவும், ரிஷாத்
பதியுதீன் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாகவும் ஆனந்த அலுத்கமகே
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட ரத்தன தேரர், அந்த
சூழ்நிலைகளுக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சிறந்த செயற்பாட்டை தாம் செய்ததாக
கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தேரரின் உண்ணாவிரதம் – அரசாங்கத்தை
தோற்கடிக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அலுத்கமகே
மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கு தேரரின்
உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் , ரத்தன
தேரர் கூட்ட அறையிலிருந்து வெளியேறிவிட்டார். நிலைமையை சமாளிக்க எதிர்க்கட்சித்
தலைவர் முயன்றபோதும் ரத்தன தேரர் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்றக் குழு
இன்று (09) காலை 11.00
மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்
தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தில் (ஜேவிபி) முன்வைத்த நம்பிக்கையில்லா
தீர்மானத்தை ஆதரிக்கவும் குழு முடிவு செய்துள்ளது.
