திருகோணமலை - பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாலையூற்று பகுதியில் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இஸ்மாயில் லெப்பை இஸ்ஸதீன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு 11 மாதம் 27ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு தமக்கு நியாயமற்றது என குறித்த எதிரியான பாலையூற்று பகுதியைச் சேர்ந்த முகமது கமால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்த போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரி என உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து குற்றவாளியான ஜவ்பர் முஹம்மத் நுஹ்மான் என்பவரை இன்றைய தினம் (15) திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வரவழைத்து கடந்த 2009 நவம்பர் மாதம் 27ஆம் திகதி வழங்கிய தீர்ப்பு சரி என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தீர்ப்பை நீதிபதி திறந்த நீதிமன்றில் இன்று வாசித்துக்காட்டினார்.
அதன்படி, 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பாலையூற்று பகுதியில் இஸ்மாயில் லெப்பை இஸ்ஸதீன் என்பவரை கொலை செய்த குற்றவாளியான ஜவ்பர் முகம்மது நுஹ்மான் என்பவருக்கு மரண தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-திருகோணமலை நிருபர் பாருக்-