Our Feeds


Thursday, October 1, 2020

www.shortnews.lk

20வது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதாது - சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் - மு.கா தலைவர் ஹக்கீம் நீதி மன்றில் கோரிக்கை

 



பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (02) இடம்பெறவுள்ளது.


குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று (30) உயர்நீதிமன்றத்தில் இரவு 7.30 வரை இடம்பெற்றன.

இதன்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யயப்பட்ட 32 மனுகள் தொடர்பில் அவற்றை தாக்கல் செய்தவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைக்க சந்தர்பமளிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் குறிப்பிடபட்டுள்ள சில சரத்துக்களின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தேவையற்ற தலையீடுகள் இடம்பெறுவதாக கூறினார்.

மக்களுக்கான நீதிமன்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது எனவும் அந்த அதிகாரம் நீதிமன்றத்தின் ஊடாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக மக்களிடம் இருந்த நீதிமன்ற அதிகாரம் பாராளுமன்றத்தால் நீக்கப்படுவதாக அவர் வாதிட்டார்.

எனவே குறிப்பிட்ட சரத்தை நிறைவேற்றிக்கொள்ள பொது மக்கள் அபிப்பிராயாம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இதன்போது மன்றில் ஆஜரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், தாம் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்து தனிநபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அது தொடர்பிலேயே ஆஜராவதாகவும் தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்திற்கு அமைய அரசியல் யாப்பு சபை இரத்துச் செய்யப்படுவதாகவும் அதன்மூலம் நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வழங்கப்படும் நியமனங்களின் போது கடைப்பிடிக்கப்படும் வெளிப்படை தன்மை இல்லாது போகின்றமை பாரிய பிரச்சினையாகும் எனவும் சட்டத்தரணி ஹக்கீம் கூறினார்.

அதனால் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாத்திரம் நிறைவேற்றப்படுவது போதுமானதாக அமையாது எனவும் மாறாக அது குறித்து கட்டாயம் பொது மக்களின் அபிப்பிராயாம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செயய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பளிக்குமாறு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொக்குகே மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இடைமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், ஓமரே கஸ்ஸப்ப தேரர், எம்.தயரத்ன, டபிள்யூ.ஏ வீரதிலக மற்றும் பீ.ஜி.பீ அபேரத்னே ஆகியோரும் இடை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »