மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொவிட்-19 கொத்தணி 21 மாவட்டங்களில் பரவியுள்ளது. இவ்வாறு 21 மாவட்டங்களில் பரவியுள்ள போதிலும் தொற்று மூலம் இனங்காணப்படுவதால் இன்னும் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் மாத்திரம் மினுவாங்கொடை கொத்தனியுடன் தொடர்புடைய 160 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் சனத்தொகை அதிகம் என்பதாலேயே இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாளோர் எண்ணிக்கை 4893 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 1446 பேர் மினுவாங்கொடை தொற்றாளர்களாவர். நேற்று செவ்வாய்கிழமை 49 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 32 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதோடு 17 பேர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோராவர். (நேற்று மாலை 5 மணிவரையான நிலைவரம்)
மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் பரவலாக இனங்காணப்படுகின்ற போதிலும் தொடர்பாளர்கள் இலகுவாக கண்டறியப்படுகின்றமையால் இதனை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம். தொற்று அறிகுறிகள் அல்லது தொடர்புகளைப் பேணியவர்கள் தகவல்களை வழங்காமல் அல்லது போலியான தகவல்களை வழங்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொள்ளுபிட்டி
கொழும்பு - கொள்ளுபிட்டியிலுள்ள மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சுகாதார அமைச்சினால் அவ்வாறானதொரு சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை.
21 மாவட்டங்களில் தொற்றாளர்கள்
தற்போது மினுவாங்கொடை கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 21 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அடிப்படை சுகாதார வசதிகள் எவற்றையும் பின்பற்றாது கவனயீனமாகச் செயற்பட்டால் தொற்று பரவல் அதிகரிக்கும். எனவே நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மக்களும் கவனமாக செயற்பட வேண்டும்.
பி.சி.ஆர். முடிவுகள்
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தான் அவற்றின் முடிவுகளைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. மாறாக பரிசோதனை உபகரணங்கள் தொடர்பில் காணப்படும் பற்றாக்குறையால் அல்ல. தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனர். எனவே அவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருப்பது சிறந்ததாகும் என்றார்.
ரத்மலானை இலங்கை வங்கி கிளை
ரத்மலானையிலுள்ள இலங்கை வங்கி கிளையின் ஊழியரொருவரின் மனைவி கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வங்கி விஷேட அறிவித்தல் ஒன்றின் மூலம் நேற்று செவ்வாய்கிழமை அறிவித்திருந்தது.
இந்தியாவிலிருந்து வந்தோர்
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய 48 பேர் செப்டெம்பர் 22 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் முறையாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்யவில்லை என்று முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போது அதற்கு பதிலளித்த வைத்தியர் ஜயருவான் பண்டார, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அதே வேளை இனியொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாமலிருப்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது என்றார்.
(எம்.மனோசித்ரா)