(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹினுதீன் இஹ்சான் எனும் சந்தேக நபரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் மொஹம்மட் ஹலீம் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் சென்று வந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
குறித்த சந்தேக நபரின் வீடமைந்துள்ள கிராம சேவகர் பிரிவின், கிராம சேவகர் நிலந்த சஞ்ஜீவ பொன்சேகா நேற்று குறித்த ஆணைக் குழுவில் சாட்சியம் அளித்தே இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய தினம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கிராம சேவகர் நிலந்த சஞ்ஜீவ பொன்சேகாவிடம், உங்கள் பிரிவில் மொஹம்மட் ஹனீபா முஹினுதீன் எனும்பெயர் கொண்ட ஒருவர் வசிக்கின்றாரா என அரச சிரேஷ்ட சட்டவாதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், தெஹிவளை, கல்வல வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முஹினுத்தீன் என்பவர் வசித்ததாக கூறினார். முஹினுதீனுடன் அவரது மனைவி அஹமட் லசீம் காரியப்பர் பாத்திமா, மகன் மொஹம்மட் மொஹினுதீன் இஹ்சான் அஹமட், மகள் அஹமட் துஷ்ரா இஸ்லாம் ஆகியோரும் அவ்வீட்டில் வசித்ததாக கிராம சேவகர் சாட்சியமளித்தார்.
எவ்வாறாயினும், தாக்குதல்கள் இடம்பெற்ற 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஆகும் போது, அவர்கள் குறித்த வீட்டில் வசிக்கவில்லை எனவும் அதிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள, பிறிதொர் வீட்டிலேயே அப்போது அவர்கள் வசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களது வீடு திருத்தப்பட்டுக்கொண்டிருந்தமையால் இவ்வாறு அவர்கள் வாடகை வீட்டில் அப்போது வசித்தனர் என சாட்சியமளித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
அந்த வாடகை வீட்டில் வசிக்கும் போது, இஹ்ஸான் அஹமட் எனும் இளைஞன் அடிக்கடி இளைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடாத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றது. அவர் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதே வேளை, தனியார் நிறுவனம் ஒன்றில் சேவையாற்றிக்கொண்டிருந்தார்என குறிப்பிட்டார்.
இதன்போது, அவரின் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் தொடர்பில் ஏதும் தகவல்கள் கிடைத்தனவா என ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குறித்த கிராம சேவகர், ரிஷாத் பதியுதீன், ஹலீம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல பிரபுக்கள் வந்து சென்றுள்ளதாக கூறினார்.
அத்துடன் இஹ்ஸான் அஹமட், பிரதேசத்தில் உள்ள தெளஹீத் ஜமா அத் பள்ளிவாசலுக்கு தொழுகைகளுக்காக சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் இரு பள்ளிவாசல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய கிராம சேவகர், அதில் ஒன்று தெளஹீத் ஜமா அத் பள்ளிவாசள் எனவும் அதனால் அப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அமையற்ற நிலைமைகள் தோன்றியதாகவும் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து, அபப்குதியில் இஹ்ஸான் அஹமட்டுக்கு மேலதிகமாக வேறு எவரேனும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டனரா என அரசின் சிரேஷ்ட சட்டவாதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கிராமசேவகர், அந்த பகுதியில் வசித்த மொஹம்மட் அக்ரம் அவ்கம், மொஹம்மட் அக்ரம் சாஜிபா ஆகிய சகோதரர்களும், புஹாரி மொஹம்மட் ரபீக் எனும் நபரும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
இதனைவிட, இஹ்ஸான் அஹமட் வாடகைக்கு வசித்த வீட்டின் உரிமையாளரான தம்மிக பிரியந்த சமரசிங்கவும் நேற்று ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார்.