- முஷாஹித் அஹ்மத்
இஸ்ரேலுடன் அனைத்து வகையான உறவுகளையும் சுமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அறபு அமீரகம் இஸ்லாமிய சட்டங்களை தளர்த்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த அமீரக ஆட்சியாளர்கள் சுற்றுலாக் கைத்தொழில் என்ற பெயரில் அமீரகத்திற்கு யூதர்கள் வருவதையும் முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் இஸ்ரேலிய கம்பனிகளின் ஊடுருவலையும் அங்கீகரித்துள்ளது.
யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் பேரளவிலேனும் இருந்த இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பலவற்றை சீர்திருத்தப் போவதாக அமீரக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது. நாட்டின் தனியார் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக திருமணம் தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள் சிறிது சிறிதாக நீக்கப்பட்டு மேற்கத்தேய லிபரல் மரபுகள் அறிமுகமாகி வருகின்றன.
சட்டபூர்வமாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ளாத ஜோடிகள் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று அனுமதிக்கப்படுகின்றது. மதுபானத் தடை நீக்கப்பட்டு ஏற்கனவே பரவலாக நடைமுறையில் உள்ள மதுபானப் பாவனை சட்டபூர்வமாக்கப்படுகின்றது. சட்டத் துறை சீர்திருத்தம் என்ற பெயரில் இவற்றை அமீரக ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
சகிப்புக் கோட்பாடுகளை வலுப்படுத்தல், முதலீட்டுச் சூழ்நிலையை உருவாக்குதல், தனிமனித சுதந்திரங்களை விரிவுபடுத்தல், சட்டவாக்கத்தைச் சீரமைத்தல் ஆகிய நோக்கங்களோடு இந்தத் தளர்வு அவசியப்படுவதாக அமீரக ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமீரகத்தின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அப்துல்லாஹ் அல் கஅவி (இவர் தன்னினச் சேர்க்கை மற்றும் பாலியல் அடையாளம் குறித்து எடுத்த திரைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாகின) அமீரகத்தின் புதிய போக்கு குறித்து கருத்து வெளியிடுகையில், “புதிய சட்டத் திருத்தங்கள் முன்னேற்றகரமானவை என்றும் சிறந்தவை என்றும் மகிழ்ச்சிப்பட முடியாது. 2020 ஆம் ஆண்டு கடினமானதும் நிலைமாற்றத்திற்குரியதுமான ஒரு ஆண்டாகவே அமீரக ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை இருக்கப் போகின்றது” என்கிறார்.
நாட்டின் வரலாற்றை முற்றிலும் மாற்றியமைக்கின்ற ஒரு பாரிய வேலைத் திட்டத்தில் அமீரக மன்னர்கள் இறங்கியுள்ளனர். மேற்கத்தேய உல்லாசப் பயணிகளை மற்றும் இஸ்ரேலின் யூதர்களைக் கவரும் வகையில் நாட்டின் பேரளவிலுள்ள இஸ்லாமிய சட்டங்களை மாற்றியமைக்கும் மோசமான சதித் திட்டத்தில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே அமீரகத்தின் சனத்தொகையில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள். தூய அறபுமொழி வழக்கிலிருந்து நீங்கி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆங்கில, பிரெஞ்சு மொழிகளிலேயே முன்னணிப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. பல்வேறு நாட்டவர்களின் கலாச்சார தளமாகவும் வணிக நடவடிக்கைகளின் கேந்திர நிலையம் என்ற பெயரில் சர்வதேச களியாட்ட முகாமாகவுமே பார்க்கப்படுகின்ற இந்த நாட்டில், வாழும் அறேபியர்களின் கலாசாரம் மேற்கத்தேய அரைநிர்வாண நாகரிகத்தை தழுவிவிட்டது. இந்நிலையில் அந்த மாற்றங்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டுக்கு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர்.
அமீரக மன்னர்கள் முதலில் செய்த தவறு இஸ்ரேலுடன் இருந்த பகைமுரண்பாட்டை நீக்கி சமாதான வழியில் பணிப்பதற்கு எடுத்த முடிவாகும். இதன் மூலம் இஸ்ரேலின் ஊடுருவலை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். முதலீடு மற்றும் உல்லாசம் என்ற பெயரில் ஊடுருவும் யூதர்கள் அமீரகத்தைக் குட்டிச் சுவராக்குவதற்கு எத்தகைய தந்திரங்களில் இறங்குவார்கள் என்பதை இனி பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.
அமீரகத்தின் இந்த மோசமான முன்னுதாரணத்தை பஹ்ரைன், சூடான் என்பனவும் பின்தொடர்ந்தன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்குடைந்து போயுள்ள ட்ரம்ப் மத்திய கிழக்கில் அமைதித் தூதுவராகச் செயல்பட்டு இந்த அறபுநாடுகளை இஸ்ரேலின் காலடியில் மண்டியிடச் செய்துள்ளார்.
சியோனிஸ்டுகளின் இந்த சதிவலையில் முதலில் சிக்கிய நாடு என்ற பெருமை அமீரகத்தைச் சாரும். பலஸ்தீனர்களால் நிர்தாட்சண்யமாய் நிராகரிக்கப்படும் உறவை அமீரகம் இஸ்ரேலுடன் வளர்த்துக் கொள்வதன் மூலம் பலஸ்தீனர்களின் முதுகில் மாத்திரம் அவர்கள் குத்தவில்லை. மாறாக, தமது தலைகள் மீதே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளனர்.
ராமல்லாஹ்வைத் தளமாகக் கொண்டு செயல்படும் பலஸ்தீன் விடுதலை இயக்கம் இஸ்ரேலிய-அமீரக உறவு பலஸ்தீனர்களின் முதுகில் குத்தும் வரலாற்றுத் துரோகம் என்றும் காஸாவைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் இதன் மூலம் அமீரக ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர் என்றும் கண்டனம் செய்துள்ளன.
இஸ்லாத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட மதுவை சட்டபூர்வமாக்கும் நகர்வை அமீரகம் முன்னெடுத்துள்ளமை இஸ்லாத்தை வளைகுடா ஆட்சியாளர்கள் ஒதுக்கித் தள்ளுவதற்கு உறுதிபூண்டுவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி வருகின்றது. ஆட்சியாளர்களின் குடும்ப மூலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் எந்த ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகிறார்கள் என்பதை ஆராய வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிஞர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேநேரம், கௌரவக் கொலை எனப்படும் விடயத்தை குற்றமாக்கும் சட்டத்தை அமீரகம் விலக்கிக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் தமது குடும்ப உறுப்பினர்களால் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் கொல்லப்படுகிறார்கள். குடும்ப கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துகிறார்கள் எனும் அடிப்படையிலேயே இவர்கள் கொல்லப்படுகின்றனர். இத்தகைய கொலைகளில் ஈடுபடுவோரை குற்றவிசாரணை செய்வதற்கான சட்டம் ஏற்கனவே அமுலில் இருந்தது. தற்போது அந்தச் சட்டத்தை விலக்கிக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய அறபு அமீரகத்தில் 90 வீதமானவர்கள் வெளிநாட்டவர்களே வாழ்கின்றனர். அங்கு அறிமுகமாகவுள்ள புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் வாரிசுரிமை, விவாகம் மற்றும் விவாகரத்து தொடர்பான இஸ்லாமிய சட்டங்களை வெளிநாட்டவர்கள் பின்பற்ற வேண்டியதில்லை எனும் நிலை உருவாக்கப்படுகின்றது.
உலக ஏற்றுமதி கண்காட்சியை ஐக்கிய அறபு அமீரகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ‘சீரழிவு’த் திட்டங்களை ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இக்கண்காட்சியைப் பார்வையிட 25 மில்லியன் பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மத்திய கிழக்கையும் ஆபிரிக்காவையும் துவம்சம் செய்யும் அமீரகக் கொள்கை
கடந்த மூன்று தசாப்த இடைவெளியில் இஸ்லாமிய அடையாளத்தையும் தனித்துவத்தையும் படிப்படியாக இழந்து வந்த ஐக்கிய அறபு அமீரகம் மேலைத்தேய கலாச்சாரங்களின் குப்பைகூடமாகவும் வெளிநாட்டவர்களின் புலம்பெயர் முகாமாகவும் களியாட்டங்களின் களமாகவுமே இருந்து வரும் நிலையில், தற்போது ஆட்சியாளர்கள் சேர்த்துக் குவித்து வைத்துள்ள கஜானாவை அறபு இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தைக் குலைப்பதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குதான் இவர்கள் யாரது முகவர்கள் என்ற கேள்வி எழுகின்றது.
வடஆபிரிக்காவின் வளமான நாடான லிபியாவில் கடாபிக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை உடைத்து நொறுக்குவதற்கு கடாபியின் ஒட்டுண்ணியான கலீபா ஹப்தரின் படையினருக்கு அமீரகம் இராணுவ ஆதரவினையும் நிதியாதரவினையும் வழங்கி வருவதாக துருக்கிய அதிபர் அர்தூகான் இன்றுவரை குற்றம் சாட்டி வருகிறார்.
சூடானின் தலைநகர் கார்டூமில் ஐக்கிய அறபு அமீரக அதிகாரிகள் பலர் ஹப்தர் எனப்படும் மேலைய ஆதரவு முகவர் குழுவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இராணுவ ரீதியில் ஹப்தர் பலமடைந்ததோடு, லிபியாவின் உள்நாட்டு யுத்தத்தைத் தீவிரப்படுத்தினார். அதனால், ஆயிரக்கணக்கான சக முஸ்லிம்கள் ஹப்தரின் அடாவடித் தனங்களால் கொல்லப்பட்டனர். துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் ஹாமி ஹப்சோய், ஐக்கிய அறபு அமீரகத்தின் இரட்டை முக அரசியல் என்று இதனை வர்ணிக்கின்றார்.
ஹப்தருக்கு போர் விமானங்களை வழங்கி அவரது அதிகார மோகத்தைத் தூண்டிவிட்ட அமீரகம் பல பில்லியன் டொன் கச்சா எண்ணெய் தீயில் கருகவும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காரணமானது. இன்றுவரை ஹப்தரின் மிகப் பெரும் பலம் அமீரக ஆட்சியாளர்கள்தான்.
இது மட்டுமன்றி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய கிழக்கின் ஒரேயொரு வறுமைப்பட்ட நாடாக விளங்கும் யெமனை குற்றுயிராக்கியதிலும் அமீரகத்தின் பங்கு முக்கியமானது. ரியாத் ஆட்சியாளர்களோடு இணைந்து யெமனில் மிகப் பெரும் மனித அழிவுகளையும் பொருட் சேதத்தையும் இவர்கள் உருவாக்கினார்கள். லிபியாவின் அரசியல் ஸ்திரம், தேசிய பாதுகாப்பு, சமாதானம் என்பவற்றை முடக்கும் வகையில் அமீரகத்தின் முகவர் ஹப்தர் செயல்படுகிறார்.
மத்திய கிழக்கில் யெமனிலும் சிரியாவிலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மனிதப் பேரவலத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் அமீரக மன்னர்கள் உள்ளனர் என்று துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் ஹாமி ஹப்சோய் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
2014 இல் யெமனில் சிவில் யுத்தம் வெடித்தது. ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சன்ஆவைக் கைப்பற்றினர். ஆட்சியாளர் அப்துர் ரப் மன்சூர் ரியாதுக்குத் தப்பியோடினார். பின்னர் உருவான கூட்டணியில் சவூதி, பஹ்ரைன் என்பவற்றோடு அமீரகமும் இணைந்தது. தெற்கு நிலைமாறும் சபை என்ற பெயரில் இந்தக் கூட்டணி நடத்திய தாக்குதல்களில் யெமனை சோமாலியா அல்லது எதியோப்பியா போன்று மாற்றும் அளவுக்கு எந்த இராணுவ இலக்குமின்றி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வறுமைப்பட்ட யெமனில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதற்கு இம்மூன்று அறபு நாடுகளும் பங்காற்றியுள்ளன. அதிலும் குறிப்பாக, அமீரகத்தின் தலையீடு அருவருக்கத்தக்கது.
இன்றைய நாட்களில் அமீரக ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ள சட்டத்துறை சீர்திருத்தம் என்ற பெயரிலான சீரழிவுத் திட்டம் எமக்கு உஸ்மானியப் பேரரசின் இறுதி நாட்களையே நினைவுபடுத்துகின்றன. அமீரகத்தின் இந்த விகாரமான முன்னுதாரணத்தை பஹ்ரைன் மற்றும் சவூதி ஆட்சியாளர்களும் ஏற்கனவே பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
ஆக, கடும்போக்குவாதத்தின் குறியீடாக கடந்த ஒரு நூற்றாண்டில் மேலைய ஊடகங்களாலும் யூத சியோசினிஸ எழுத்தாளர்களாலும் வர்ணிக்கப்பட்டு வந்த மத்திய கிழக்கு இன்று இஸ்லாமியப் பண்பாட்டையும் தனித்துவத்தையும் உத்தியோகபூர்வமாகவே அழித்தொழிக்கும் பிற்போக்கான நிலைக்கு வந்துள்ளனர். இதன் மோசமான விளைவுகளை அறேபியர்கள் நிச்சயம் எதிர்கொள்ளத்தான் போகிறார்கள்.
இஸ்லாத்தை ஒதுக்கித் தள்ளும் வளைகுடா ஆட்சியாளர்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் உரிமை அறபு சிவில் சமூகத்திற்கே உள்ளது.
நன்றி - மீள்பார்வை