மத்ரஸாக்கள் இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அத்துடன் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இலங்கையில் அமுலில் உள்ள கண்டியர் சட்டம், தேச வழமை, முஸ்லிம் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவங்ச தேரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்ரஸா பாடசாலைகளுக்கு ஏனைய அரச, தனியார், சர்வதேச பாடசாலைகள் போன்று கல்விச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் நிலைப்பாடா இது? கடந்த காலங்களில் சவுதி, பாகிஸ்தானிலிருந்து ஆசிரியவர்கள் வந்து இங்கு அடிப்படைவாதத்தை போதித்துள்ளார்கள்.
நாட்டில் 1600 மத்ரஸா பாடசாலைகள் இருக்கின்றன. இங்கு ஷரீஆ சட்டம், அரபு மொழி வஹ்ஹாபிஸம் போன்றவை கற்பித்துக் கொடுக்கப்படுகின்றன. இது நாட்டின் பொதுக் கல்வி முறைக்கு பொருத்தமற்றதாகும். இங்கு அடிப்படைவாதிகளே உருவாக்கப்படுகின்றார்கள்.
இதனால் மத்ரஸா பாடசாலைகளை கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். இது உங்கள் அரசின் கீழ் நடைபெறாது என்பது கல்வி அமைச்சரின் கருத்து மூலம் உறுதியாகியுள்ளது.