Our Feeds


Saturday, November 14, 2020

www.shortnews.lk

முடிவுக்கு வராத அமெரிக்க தேர்தல் எண்ணிக்கை - ஜோர்ஜா மாநிலத்திலும் பைடன் வெற்றி, வட கரோலினாவில் டிரம்புக்கு ஆறுதல் வெற்றி

 

தலைப்பைப் பார்த்துவிட்டு, என்ன இன்னும் அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியவில்லையா என்று கண்கள் விரியப் பார்க்கிறீர்களா? ஆம். அது உண்மைதான்.




அதிபருக்கான போட்டியில் வெற்றி பெறத் தேவையான 270க்கு மேற்பட்ட இடங்களில் பைடன் வெற்றி உறுதியானதால் அவர் அதிபராகத் தேர்வு பெறுகிறார் என்று ஊடகங்கள் முன்னறிவிப்பு (புரொஜெக்ட்) செய்தன.

அமெரிக்கத் தேர்தலில், அதிபர் வேட்பாளர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்தல் சபை வாக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டால், அந்த மாநிலத்தில் உள்ள தேர்தல் சபை வாக்குகள் முழுவதும் அவருக்கு சேர்ந்துவிடும்.

இந்த வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்ற வெற்றி மூலம் அந்த மாநிலத்தின் 20 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று பைடன் 270 என்ற எல்லைக் கோட்டைக் கடந்தார்.

ஆனால், அரிசோனா, ஜோர்ஜா, வட கரோலினா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவந்தது. அங்கெல்லாம் முடிவுகள் அறிவிக்கப்படவோ, முன்னறிவிப்பு செய்யப்படவோ இல்லை.

ஆனால், அந்த மாநிலங்களின் முடிவுகள் எப்படி இருந்தாலும், வெற்றிக்குத் தேவையான எண்களை டிரம்பால் பெற முடியாது என்பதால்தான் ஊடகங்கள் பைடனை வெற்றியாளராக முன்னறிவிப்பு செய்தன. அதிகாரபூர்வ அறிவிப்பு வருவது பல வாரங்கள் ஆகும் என்பதால் அமெரிக்கத் தேர்தலில் இப்படி ஊடகங்கள் முன்னறிவிப்பு செய்வது வழக்கமானதுதான். அத்தகைய முன்னறிவிப்புகள் கிட்டத்தட்ட எப்போதும் பிழையாவதில்லை.

சரி. இப்போது நம் தலைப்புக்கு வருவோம்.

ஆம். இப்போதுதான் ஜோர்ஜா மாநிலத்தில் பைடன் வெற்றியாளர் என்று பிபிசி முன்னறிவிப்பு (புரொஜெக்ட்) செய்துள்ளது.

ஜோர்ஜா மாநிலத்தில் 1992ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை.

அந்த மாநிலத்தில் தற்போது டிரம்பை விட ஜோ பைடன் 14 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஆனால், இருவருக்கும் இடையிலான வேறுபாடு 0.5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்பது விதி. இதனால், மாநிலம் முழுவதும் வாக்குகள் மீண்டும் கைகளால் எண்ணப்படுகின்றன. ஆனால், இதனால், முடிவுகள் தலைகீழாக மாறிவிடாது என்று டிரம்ப் தரப்பினரே கூறுகின்றனர்.

ஜோர்ஜாவில் பைடன் பெற்றுள்ள வெற்றி மூலம் அவருக்கு 16 தேர்தல் சபை உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதிபர் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் சபை உறுப்பினர்கள் போதும் என்ற நிலையில் இந்த 16ம் சேர்ந்து அவரது வலுவை 306 ஆக ஆக்கியுள்ளன.

இதன் மூலம் 2016ம் ஆண்டு டிரம்ப் பெற்ற எண்ணிக்கையை பைடன் சமன் செய்கிறார். இந்த எண்ணிக்கையை அப்போது ஒரு பிரும்மாண்ட வெற்றி என்று டிரம்ப் வருணித்தார்.

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ள அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். அத்துடன், சில மாநிலங்களில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை எதிர்த்து அவர் தரப்பு வழக்குத் தொடர்கிறது. இந்நிலையில் ஜோர்ஜா வெற்றி பைடன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், ஜோர்ஜாவைப் போலவே முடிவு தெரியாமல் இருந்த வட கரோலினா மாநிலத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுகிறார் என்று முன் அறிவிப்பு (புரொஜெக்ட்) செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் 15 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற்று டிரம்ப் எண்ணிக்கை 232 ஆக உயர்கிறது என்றும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜோர்ஜா முன்னறிவிப்புக்குப் பிறகும் அவர் பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பேசும்போது புதிய நிர்வாகம் வரும் என்பதை தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியபின் முதல் முறையாக அவர் குறிப்பால் உணர்த்தினார்.

தேர்தல் முடிந்த பிறகு முதல் முறையாக அதிகாரபூர்வமாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நான் அமெரிக்காவில் பொது முடக்கம் அறிவிக்கமாட்டேன். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எந்த நிர்வாகம் அப்போது இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? காலம்தான் அதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார் அவர்.

பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும், பைடன் கைகளுக்கு நிர்வாகம் பரிமாற்றம் அடைவதற்கு மரபான முறையில் அவர் உதவி செய்யவேண்டும் என்றும் அவர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது.

அரிசோனா மாநில முடிவுகளை எதிர்களை எதிர்த்து வழக்குத் தொடரும் திட்டத்தை டிரம்பின் அணி கைவிட்டது. அந்த மாநிலத்தில் பைடன் வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாது என்று அவர்கள் நினைத்ததன் விளைவு இது.

பைடன் என்ன சொல்கிறார்?

வழக்கமாக நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர் உடனடியாக பதவிக்கு வரமாட்டார். ஜனவரி 20ம் தேதிதான் அவர் பதவி ஏற்பார். அதற்குள் அவர் நிர்வாகத்தைப் புரிந்துகொள்ளும் வகையிலும், எளிதான முறையில் அவர் கைகளுக்கு நிர்வாகம் பறிமாற்றம் அடையும் வகையிலும், அதிகாரப் பறிமாற்றக் குழு ஒன்றை அதிபர் பதவிக்குத் தேர்வு பெற்றவர் நியமிப்பார்.

அதிபர் போட்டியில் பைடன் வெற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், அமெரிக்க கூட்டரசின் (மத்திய அரசு) முக்கிய முகமைகள் பைடன் அணுகுவதை அனுமதிக்கவில்லை. அத்துடன் நிர்வாகப் பரிமாற்றத்துக்குத் தேவைப்படும் நிதியுதவியையும் செய்யவில்லை.

வழக்கமாக அமெரிக்க அதிபருக்கு தினசரி பாதுகாப்புத் துறை சார்ந்த விவரங்கள் அதிகாரிகள் மூலம் எடுத்துரைக்கப்படும். அதிபர் தேர்தல் நடந்த பிறகு, புதிதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் இந்த விவரங்கள் எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் நாட்டை ஆள்வதற்கு அவர் தம்மை தயார்படுத்திக்கொள்வார்.

செக்யூரிட்டி பிரீஃபிங் என்று அறியப்படும் இந்த விளக்கவுரைகளும் தற்போது பைடனுக்கு செய்யப்படுவதில்லை. இது பைடனின் ஆளும் திறனை பாதிக்கும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

நிர்வாகப் பறிமாற்றப் பணிகள் முன்னேற்றம் அடைகின்றன என்றாலும், கூட்டரசின் முகமைகளுடன் நேரடியாக தொடர்புகொள்வது உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

டிரம்ப் என்ன சொல்கிறார்?

அடுத்த முறை தாம் அதிபராக இருக்கமாட்டோம் என்பதை டிரம்ப் ஒப்புக்கொள்ளத் தயாராவது போலத்தான் தெரிகிறது. ஆனால், இன்னமும் அவர் தேர்தல் முடிவுகளை ஏற்கத்தயாராக இல்லை. தேர்தல் முடிவுகளை விமர்சித்து வெள்ளிக்கிழமை கூட அவர் ட்வீட் செய்திருந்தார்.

தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வாஷிங்டனில் சனிக்கிழமை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாகவும் அவர் தெரிவித்தள்ளார். தேர்தல் முறைகேடு நடந்ததாக டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு வந்துள்ளது.

இரண்டாவது முறையாக தாம் அதிபராக இருப்போம் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலெய் மெக்எனானி ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.


BBC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »