வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள
தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக
விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின்
தெரிவித்துள்ளார்.
ஸ்கைய்ப் காணொளி மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை
நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம்
வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீங்கள் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால்
பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள மக்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டார்கள் என ஆணைக்குழு அவரிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர் ´வடமாகாணத்தில் 2 வீதம் மக்கள் சிங்களவர்களும் 5
வீதம் முஸ்லிம்களும் உள்ளனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் சுமார்
ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றினர். 2009
ஆம் ஆண்டில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை. அப்போது பசில்
ராஜபக்ஸவே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார் ஆனால் நான் அவரின் திட்டத்தை
ஆதரித்தேன்.
மொணராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை அருகே வசிக்கும் சுமார் 5,000 சிங்களவர்கள்
கலபோகஸ்வேவ நமல்கம என்ற பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கு 100
வருடங்களுக்கு அதிகமான பெரிய மரங்கள் இருந்தன. மீள்குடியேற்றத்தின் போது
அந்த மரங்களும் வெட்டப்பட்டன. ஆனால் அவர்களுக்கு எதிராக யாரும்
முறையிடுவதில்லை மாறாக அனைவரும் வில்பத்து கல்லாறு காடழிப்பு பற்றியே
அதிகம் பேசுகின்றார்கள். உண்மையாகவே அங்கு காடழிப்பு இடம்பெறவில்லை. எனவே
வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு
செய்யவுள்ளேன்´ என்றார்.
அவர் இவ்வாறு தெரிவித்த சந்தர்ப்பத்தில் கல்லாறு தீர்ப்பை வழங்கிய
மேன்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நீதிபதிகள்
ஆணைக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.