ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் ஹஷிமினால் நடத்தப்பட்ட பயிற்சிகளில் கலந்துகொண்ட யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்ல − ஹிங்குல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சஹரானினால் சில பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயிற்சிகளை பெற்றுக்கொண்ட 6 பெண்கள், கடந்த டிசம்பர் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இந்த பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, குறித்த யுவதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த யுவதி பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில், குறித்த யுவதியின் மூன்று சகோதரர்களும், தந்தையும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
