இலங்கைக்கு விஜயமேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடு திரும்புவதற்கு முன்னர் தடைகளைத் தாண்டி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்தனர். இதன்போது ஜனாஸா தகனம் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளனர்.
ஜனாஸா அடக்கம் தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியதாகவும் விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் எனவும் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்ததாக முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஷோட் நியுசுக்கு தெரிவித்தார்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய இன்று ஷங்ரில்லா ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகலாயத்தினால் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹலீம், ஹாபிஸ் நஸீர் அஹமட், தௌபீக், ஹரீஸ், முஷாரப், இஷாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், ஹலீம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
