(ஆர்.யசி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான நபர்களுக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் அனைவருக்கும் அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபரினால் வழக்கு தொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் அரசாங்கம் பின்னிற்பதாக அரசியல் ரீதியில் பாரிய விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்கவில்லை, தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டறிவது இலகுவான காரியம் அல்ல. எம்மைப் பொறுத்த வரையில் சகல குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்.
ஒரு சிலர் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிப்பது எதிர்காலத்தில் மீண்டும் சிக்கலாக அமையலாம். எவ்வாறு இருப்பினும் பிரதான குற்றவாளிகளென 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யவுள்ளதாக சட்டமா அதிபர் எமக்கு தெரிவித்துள்ளார்.
